Thursday, December 26, 2013

2013 - திரும்பி பார்க்கிறேன்……

2013 - திரும்பி பார்க்கிறேன்……
எனக்கு நாள்,வாரம்,மாதம்,வருடம் போன்ற எந்த மனிதனின் கற்பிதங்களிலும் நம்பிக்கை இல்லை;” நாளை மற்றொரு நாள்” என்பதில்தான் எனக்கு நம்பிக்கை, இருந்தாலும் இந்த பதிவை எழுதுவதில் எந்த கூச்சமும் இல்லை என்பது நகைமுரண்.

ஒவ்வொரு வருடத்தின் முடிவிலும் அந்த வருடத்தின் முக்கிய நிகழ்வுகளை அசை போடுவதில் நமக்கொரு அலாதி சுகம்தான்.அப்படித்தான் இந்த பதிவும்.

33 வருட வாழ்க்கையில் மிக மோசமான நிகழ்வுகளை சந்தித்திருக்கிறேன்.சில நல்ல நிகழ்வுகளும் நடந்தன.
தீதும் நன்றும் பிறர் தர வாரா எனும் பழமொழியை தீர்க்கமாக நம்புபவன் நான்.அதனால் நடந்த எந்த நிகழ்வுகளுக்கும் நானே தார்மீக பொறுப்பேற்கிறேன்.

இந்த வருடத்தில் கற்ற பாடங்கள் இன்னும் எத்தனை பல்கலைகழகங்கள் சென்று கற்றாலும் கிடைக்காத அனுபவத்தை கொடுத்தன.
”இடுக்கண் வருங்கால் நகுக” என்னும் குறள் மிகப் பெரிய வன்முறையாகப் பட்டது, எனக்கு பலரும் அதை தவறாக புரிந்து கொண்டு என் துன்பத்தில் அவர்கள் சிரித்தனர்.பரவாயில்லை.

எனக்கு நண்பர்கள் யாரென்பதை புரியவைத்த ஆண்டு இது.ஒரு சில நல்ல உள்ளங்களைத் தவிர மற்றவர்கள் அனைவரின் சுயரூபத்தையும் புரிய வாய்ப்பு கிடைத்தது.ஆனாலும் நட்பின் இலக்கணம் மீது எனக்கு இன்னும் நம்பிக்கை இருக்கிறது.நட்பு என்பது பல வருட பழக்கம் என்பதை நாம் இன்னும் தப்பாகப் புரிந்து கொண்டிருக்கிறோம்.நல்ல நட்பிற்கு நாள்,கிழமை கிடையாது.இது என் புரிதல்.

வாழ்க்கை என்பதை வெற்றி,தோல்வி எனும் வியாபாரமாக பார்க்கும் பழக்கம் என்னிடமில்லை அதை ஒரு பயணமாக மட்டுமே பார்க்கிறேன்.அதனால் பொருளாதார ஏற்றத் தாழ்வுகள் என்னை பாதிப்பதை நான் அனுமதிப்பதில்லை.மாறாக இந்த சமூகத்தின் ஊற்றுக்கண் என்னை ஒரு வியாபாரியாக எடைபோடுகிறது.நான் சம்பாதிக்கும்போது என்னை பாராட்டுவதும்,சறுக்கும்போது என்னை எள்ளி நகையாடுவதையும் வழக்கமாக வைத்திருக்கிறது இது எனக்கு பெரிய அபத்தமாகப்படுகிறது.என்னை, என் வாழ்க்கையை,எனக்காக வாழவிடுங்கள் ப்ளீஸ்.

நான் யாருடனும் என்னை ஒப்பிட்டு கொள்வது கிடையாது என்னையும் யாருடனும் ஒப்பிடாதீர்கள்.சமூக மதிப்பீடுகள்,அரசியல்,கலை,அறிவியல்,ஊடகம்,ஆன்மீகம்,பொழுதுபோக்கு என்ற அனைத்து விசயங்களிலும் நான் மற்றவர்களிடமிருந்து மாறுபடுகிறேன்,மற்றவர்களும் என்னிடம் இருந்து மாறுபடுகிறார்கள்.அதனால் தயவு செய்து……………………………….

நடந்த சில நல்ல நிகழ்வுகள்
எனக்கு பிடித்த இலக்கியம்,உலக சினிமா பற்றிய புரிதலுக்கு தீனி போடும் விதமாக ஒரு மாற்று ஊடக அமைப்பை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது.இயக்குனர் ராம்,இயக்குனர் லீனா மணிமேகலை,எழுத்தாளர் அறந்தை மணியன்,இயக்குனர் & எழுத்தாளர் அம்ஷன் குமார் இன்னும் பலருடன் பேசுவதற்கு வாய்ப்பு கிடைத்தது.கற்றுக் கொள்ள நிறைய இருக்கிறது இந்த உலகில் என்பதை மீண்டும் மீண்டும் உணர்ந்து கொள்ளும் தருணம்.

11வது சென்னை திரைப்பட விழாவை பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது.16 உலக திரைப் படங்களை பார்தேன்.அதில் ஆறு அற்புத திரைப் படங்களும் அடங்கும்.

விழாவில் பதிவுலக நண்பர் சுரேஷ் கண்ணன் அவருடன் அளவளாவினேன்.பல விசயங்களில் ஒரே சிந்தனை எனக்கும் அவருக்கும். நல்ல சந்திப்பு.

ஒரு சில உதவி இயக்குனர்களையும் சந்தித்து பேசினேன்.இயக்குனர் பாலாஜி சக்திவேல் அவர்களுடன் சற்று நேரம் பேசினேன்.

மறக்க முடியாத மரணம்:
தோழி இசைப் ப்ரியா,குமரன் பாலச் சந்திரன்,தலைவர் நெல்சன் மண்டேலா,

வாசிப்பில்
ஜே ஜே சில குறிப்புகள்
உலகை உலுக்கிய பத்து நாட்கள்

இந்த வருடத்தில் தமிழில் நான் பார்த்த படங்களில் என்னை கவர்ந்தவை:
சூது கவ்வும்
ஆரண்ய காண்டம்
தங்க மீன்கள்
ஓநாயும் ஆட்டுக்குட்டியும்

பாதித்த நிகழ்வு
முள்ளிவாய்க்கால் முற்றம் இடிப்பு,உத்தரகாண்ட் வெள்ளம்,
அனைவரை போல் நானும் சுயநலவாதிதான் (சிலரை தவிர) என்றாலும் அவ்வப்போது நடக்கும் சில சமூக அவலங்கள் என்னை பாதிக்கிறது; என்னால் எதுவும் செய்ய முடியாத கையாலகாததனத்தை வலையுலகம் மற்றும் முகநூல் மூலமாக தீர்த்துகொள்ளும் ஒரு வடிகாலாக நான் இதைப் பார்க்கிறேன்.


என்ன செய்வது?

Tuesday, December 24, 2013

தலைமுறைகள்…..

தலைமுறைகள்…..
“ I don’t know Tamil “
“My second language is Hindi “
இப்படி எல்லாம் சொல்லிக்கொண்டு அலையும் நம்மைப் போன்ற கனவான்களும் நம் குழந்தைகளும் கண்டிப்பாக பார்க்க வேண்டிய படம் இது.

கடவுள்,சாதி,மதம்,மொழி எல்லாம் கற்பிதம் என்றாலும் தாய் மொழிதான் ஒருவனை அடையாளப்படுத்துகிறது.அந்த தாய் மொழி தெரியாத ஒரு பேரனுக்கும், தாய் மொழியைத் தவிர வேற எந்த மொழியையும் தெரியாத ஒரு தாத்தாவுக்கும் இடையேயான வாழ்வியலை பற்றி பேசுகிறது தலைமுறைகள்.

கொஞ்சம் அசந்தாலும் ஒரு பிரச்சாரப் படமாகவோ,ஒரு “கதை நேரமாகவோ” மாறிவிடக் கூடிய படத்தை மிக கவனமாக ஒரு திரைப் படமாக பதிவு செய்து இருக்கிறார் பாலு.

கூட்டுக் குடும்பங்கள் வழக்கொழிந்து கொண்டு இருக்கும் இக்காலத்தில் வீட்டில் முதியவர்கள் இல்லாமல் வாழ்ந்து கொண்டிருக்கும் நம் சமுதாயம் எத்தனை போலியானது என்று நமக்கு மறைமுகமாக உணர்த்தியிருக்கிறார் பாலு.

திரைக் கதை அத்தனை அழுத்தமில்லை,எடிட்டிங் சற்று உறுத்தலாகப் படுகிறது. பிண்ணணி இசை அவ்வளவு மோசமில்லை,ராஜாவால் “வீடு” படம் போன்ற ஒரு பிண்ணணி இசை வார்ப்பை கொடுக்க முடியாது என்று புரியவைத்து இருக்கிறார்.

பாலு நேரில் பேசுவது போலவே நடித்து இருக்கிறார்.மற்றவர்கள் இயல்பாக இருக்கிறார்கள்.ஒரு சிலர் நடிப்பில் அமெச்சூர்தனம் தெரிகிறது.


இந்த வருடத்தில் இரண்டு அல்லது மூன்று படங்கள் தான் தேறியிருக்கின்றன அதில் தலைமுறைகளை தைரியமாக சேர்க்கலாம்.






Friday, December 20, 2013

சமூக ஒழுக்கம்.....



நேற்று திரைப்பட விழா செல்ல குமணன்சாவடி சென்று பஸ்சில் ஏறினேன்.மாங்காடு டு ப்ரோட்வே பஸ்.கூட்டம் அதிகம் இருந்ததால் நின்று கொண்டு பயணித்தேன்.என் அருகில் இரண்டு இளைஞர்கள் அமர்ந்திருந்தனர்.இருவரும் ஏதோ பேசிக்கொண்டு வருகையில் அதில் ஒருவன் மட்டும் 'மாவா' எனும் லாகிரிவஸ்தை வாயில் மென்று அதன் எச்சிலை வெளியில் ரோட்டில் துப்பி கொண்டே பேசிகொண்டிருந்தான்.எனக்கு வந்த ஆத்திரத்துக்கு ... நல்ல வாயில வருது.இந்த மாதிரி சமுக ஒழுக்கம் இல்லாதவர்களை என்ன செய்யலாம்?.இதில் நெற்றியில் பழனி படிக்கட்டு மாதிரி திருநீறு,மஞ்சள்,குங்குமம்.கேட்டால் தன்னை பக்திமான் என்று கூறுவதற்கு.மத மற்றும் ஜாதி ஒழுக்கங்களில் நம்பிக்கையும், ஈடுபாடும் உள்ள நமக்கு சமூகம் சார்ந்த ஒழுக்கங்களில் ஏனோ மிகவும் அசிரத்தையாக இருக்கிறோம்.ரோட்டில் எச்சில் துப்புவது,தெருவில் சிறுநீர் கழிப்பது,பேருந்தில் பெண்களை உரசுவதில்,பொது இடங்களில் போனில் சத்தமாக பேசுவது,திரைஅரங்கில் தொண தொணவென பேசுவது,வகுப்புகளில் அடுத்தவர்களை பாடங்களை கவனிக்கவிடாமல் தொந்தரவு செய்வது என அடுக்கி கொண்டே போகலாம்.எத்தனை கோவில்கள்,மசூதிகள்,தேவாலயங்கள் சென்றாலும் மத போதனைகள் தவிர்த்து சமூக ஒழுக்கம் பற்றியும் தனி மனித சுதந்திரம் பற்றியும் சொல்லித்தருகிறார்கள் என்கிற கேள்வி எழுகிறது.அதையெல்லாம் பள்ளிகளும்,கல்லூரிகளும் சொல்லி தரும் என்று அவர்கள் மேல் பழியை போட்டு விடுவார்கள்.சரி, பாமரர்களுக்கு யார் சொல்லி தருவது.?

சிந்திப்போம்.....

உதவி இயக்குனர்களும், இயக்குனர்களும்...!

உதவி இயக்குனர்களும், இயக்குனர்களும்...!

நடந்து கொண்டிருக்கும் சென்னை பட விழாவில் நிறைய நாளைய இயக்குனர்களை சந்திக்க நேர்ந்தது.அதன் விளைவாக என் கேள்விகளும்,விளக்கங்களும்.

இன்று எத்தனையோ இயக்குனர்கள் நேற்று யாரிடமோ உதவி இயக்குனர்களாக பணி புரிந்தவர்கள்தான், ஆனால் இன்று சற்று உயர்ந்தவுடன் பிற சக இயக்குனர்களை பற்றி எந்த அக்கறை இல்லாமல் எப்படி இருக்க முடிகிறது?

நிரந்தர பணியின்மை,முறையான சம்பளயின்மை,அறிவு சார்ந்த திருட்டு,மனித தன்மையற்ற முறையில் நடத்தும் விதம் என எத்தனையோ கொடுமைகளுக்கு நடுவில் அவர்கள் வாழ வேண்டி இருக்கிறது.

குறைந்தபட்சம் 100 உதவி இயக்குனர்கள் தங்க ஒரு விடுதி,3 வேளை சாப்பிட மெஸ்,ஒரு சிறிய நூலகம், ஒரு 100 உலக சினிமாக்கள் குறுந்தகடுகளுடன் கூடிய ஒரு சிறிய ஹோம் தியேட்டர் என ஒரு விடுதி கட்டி கொடுத்தால் இவர்களின் அவல நிலை மாறலாம்.

ஊழலை ஒழிப்பேன்,இந்தியாவை காப்பாற்றுவேன்,சமுக அவலங்களை தோல் உரிப்பேன் என்றெலாம் உதார்விட்டு படம் எடுக்கும் இளம் மற்றும் முது இயக்குனர்கள் இதை பற்றி கொஞ்சம் வாய் திறப்பார்களா?

பார்க்கலாம்...........

11வது சென்னை சர்வதேச திரைப்பட விழா – அபத்தங்களும்,ஆறுதல்களும்


பல பிரச்சனைகளும்,அரசியல் குறுக்கீடுகளும் இடையே நடைபெற்ற இந்த விழாவில் பல அபத்தங்களையும் சில ஆறுதல்களையும் காண முடிந்தது.
சுஹாசினி பேசுகையில் யாரும் பொருளுதவி செய்யவில்லை என்று புலம்பி தள்ளினார்,மற்ற மாநிலங்களில் எல்லாம் அரசின் உதவியில் நடந்த விழா நம்மூரில் அனாதையாக நடந்தேறியது.

ஹிந்து நாளிதழ் 20 லட்சம்,சரத் குமார் 8 லட்சம்,மணிரத்னம் 7 லட்சம் என பலரும் உதவியுள்ளனர்.ஆனால் நடிகர் சங்கம்,திரைப்பட தயாரிப்பாளர் சங்கம்,இயக்குனர் சங்கம் இன்னும் பிற சங்கத்தினர் எந்த உதவியும் செய்யாதது ஏனோ தெரியவில்லை?
இன்னும் நம்மூரில் ஒரு திரைப்படத்தை எப்படி பார்ப்பது என்றே  தெரியவில்லை.படம் பார்க்கும் போது அலைபேசியை உபயோகிப்பது,குறட்டை விட்டு தூங்குவது,படம் ஆரம்பித்து பாதி காட்சியில் வருவது,இடையில் விசில் அடிப்பது என எல்லா வகை தொந்தரவுகளையும் தருவது மிகுந்த சலிப்பை தந்தது.
அப்புறம் நகரின் மையத்தில் மட்டும் நடந்த இந்த விழா சென்னையின் புற நகரையொட்டியும் நடக்க வேண்டும்.உதாரணத்திற்கு தாம்பரம்,ஆவடி,வட சென்னை,பூந்தமல்லி,திருவான்மியூர் போன்ற இடங்களிலும் நடந்திருந்தால் பலரும் பயனடைந்திருப்பார்கள்.
பலருக்கு இப்படியொரு நிகழ்வு நடப்பது தெரியெவேயில்லை.இன்னும் விளம்பரப்படுத்தியிருக்கலாம்.
தமிழ் படங்களின் தரத்தை பற்றிய சர்ச்சையும் ஒய்ந்தபாடில்லை.”ஓநாயும் ஆட்டுக்குட்டியும்” படம் திரையிடப்படாதது குறித்த கேள்விக்கு மிஷ்கின் படத்தை தர முன்வரவில்லை என்றனர்.ஆனால் ”மூன்று பேர் மூன்று காதல்”, “மூடர் கூடம்”, ”ஆறு மெழுகுவர்த்திகள்”,”கும்கி” எல்லாம் எந்த தைரியத்தில் திரையிடுகிறார்கள்?பாதி படங்கள் காப்பி,மீதிய படங்கள் அரசியல் குறுக்கீடுகள்.
நான் பார்த்த 16 திரைப்படங்களில் 6 திரைப்படங்கள் அப்படியொரு அற்புதம்.அவைகள் The Circle within,Roa,Harmony Lessons,Parviz,Tangerines, இவை அனைத்தையும் தயவு செய்து காண தவறாதீர்கள்.Ship of Theseus ஏற்கனவே திரையரங்கில் பார்த்து விட்டதால் அதையும் சேர்த்து கொள்ளலாம் நல்ல படம்.
நான் தவற விட்ட படங்கள் Tha Omar,Hush Girls Don’t scream,Blue is the warmest colour,The past,Like father Like son,Mother I love you முதலியவைகளாகும்.இவை அனைத்தையும் இணையத்தில் பார்த்து விட வேண்டும்
சில இயக்குனர்களையும், உதவி இயக்குனர்களையும் சந்தித்து பேசினேன்.அவர்களின் பேச்சின் மூலம் தெரிந்து கொண்டவைகளைப் பற்றி பிரிதொரு சந்தர்ப்பத்தில் எழுதுகிறேன்.
சில புதிய நண்பர்களையும்,நல்ல அனுபவங்களையும் பெற்ற மகிழ்ச்சியுடன் விடை பெறுகிறேன்.

நன்றி.மீண்டும் சந்திப்போம்.

















Wednesday, November 20, 2013

எது நல்ல சினிமா ? – பாகம் - ஒன்று.

அண்மையில் இணையத்திலும்,முகப்புத்தகத்திலும் ” நல்லசினிமா எது? கெட்ட சினிமா எது? ” என்று பலரும் சண்டையிட்டு கொண்டிருக்கிறார்கள்.. அதன் நீட்சியாக இந்த இடுகை…...


நான் பிறந்தது 1980 இல் பிறந்தேன்.எனக்கு விவரம் தெரிந்து நான் பார்த்த படங்கள் அனைத்தும் அதிரடி மசாலாக்கள் மட்டுமே.உதாரணத்திற்கு ரஜினி,கேப்டன்,அர்ஜுன் போன்றவர்களின் படத்தைதான்.

1991 இல் வெளியான் “ரோஜா” திரைப்படம்தான் எனக்குள் பெரிய தாக்கத்தை எற்படுத்தியது எனலாம்.ஏன் என்றால் அந்த படத்தில் சண்டை காட்சி இல்லை,பெரிய ஹிரோக்கள் இல்லை ஆனாலும் அந்த படம்தான் எனக்கு ஏதோ ஒன்றை ஏற்படுத்தியது.

ஆனாலும் மசாலாக்களின் மீதான மோகம் குறையவில்லை.

பின்பு மணிரத்னம் படங்களை ஒன்று விடாமல் பார்க்கத் தொடங்கினேன்.
பம்பாய்,இருவர்,உயிரே என்று சொல்லிகொண்டே போகலாம்.

பின்பு 1995 பத்தாம் வகுப்பு விடுமுறையில் நிறைய ஆங்கில படத்தை பார்க்க வாய்ப்பு கிடைத்தது.

ஜாக்கி சான்,ஜெட் லீ,வேன் டேம்,அர்னால்ட்,ஸ்டாலோன் போன்ற அதிரடி ஹிரோக்கள் படங்களை கண்டு மெய் சிலிர்த்து நின்றேன்,

DDLJ,DIL TO PAGAL HAI,KOYLA,TRIMURTHY,KUCH KUCH HOTA HAI போன்ற ஹிந்தி படங்கள் வேறு பார்த்து என் ஹிந்தி அறிவை வளர்த்து கொண்டேன்.

”சேது” திரைப்படம் வெளியாகி தமிழ் சினிமாவில் மீண்டும் யதார்த்த அலை அடிப்பதாக அப்போதைய பத்திரிக்கைகள் அந்த படத்தை கொண்டாடின.

அப்பொழுதுதான் என்க்கு நாம் இது நாள்வரை பார்த்த படங்கள் எல்லாம் என்ன என்று கேள்வி தோன்றியது.

பின்பு மோகமுள்,பாரதி,ஹஸ்ஃபுல்,போன்ற படங்களை திரை அரங்கில் சென்று கண்டேன்.

பின்பு சினிமா சம்பந்தமான என் சிற்றறிவுக்கு எட்டிய ஆராய்ச்சியின் முடிவில் இயக்குனர்தான் ஒரு படத்தின் ஹீரோ என்று அறிந்து கொண்டேன்.

பின்பு தமிழ் சினிமாவின் முக்கிய இயக்குனர்கள் படங்களை பட்டியலிட்டு பார்க்கத் தொடங்கினேன். உதாரணத்திற்கு மகேந்திரன்,பாலு மகேந்திரா,ருத்ரய்யா,பாரதி ராஜா என்று ஒரு பெரிய பட்டியல் நீளும்.
இன்னும் நம்மில் பலர் ஹாலிவுட் படங்கள்தான் “உலக சினிமா” என்று நினைத்து கொண்டிருக்கிறார்கள் நானும் அப்படித்தான் நினைத்து கொண்டிருந்தேன்.



அகிரா குரோசாவின் “RASHOMON” படம் பார்க்கும் வரை.
பின்பு என் ஆவல் அதிகரிக்கத்தொடங்கியது.இந்திய சினிமாக்களை விட்டு விட்டு ஈரான்,ஃப்ரெஞ்சு,ஜெர்மன்,சீனா,பிரெசில் போன்ற நாட்டில் தயாரிக்கப்படும் படங்களை இணையத்தில் தேடிப்பிடித்து பார்க்கத் தொடங்கிவிட்டேன்,BICYCLE THIEVES,CITY LIGHTS,THE GOLD RUSH,400 BLOWS,RUN LOLA RUN,AMORES PERROS,CINEMA PARADISE,PERSONA,TALK TO HER,SEVEN SAMURAI என்று சொல்லிக்கொண்டே போகலாம்.அத்தனையும் அற்புதமான படங்கள்.

ஹாலிவுட்டில்லும் சில நல்ல படங்களை எடுக்கத்தான் செய்கிறார்கள்.
அவற்றிலும் சல்லடை போட்டு சில பல அற்புதங்களை பார்த்து இருக்கிறேன்.உதாரணத்திற்கு CITIZEN KANE,CASABLANCA,KILL BILL,TAXI DRIVER,CHINA TOWN,THE APARTMENT,CITY OF GOD,PSYCHO,PULP FICTION,SCHINDLER’S LIST என்று அடுக்கிகொண்டே போகலாம்.

ஆனால் ஏன் இந்தியாவில் மட்டும் இப்படி மசாலாக்கள் தவிர நல்ல படங்கள் வரவில்லை என்ற ஆதங்கம் திரு.சத்யஜித்ரே படங்களை பார்த்தன் மூலம் தீர்ந்தது.அவருடைய திரை மொழி மிகவும் அபாரம்.

ஒரு நல்ல சினிமா என்பது பன்ச் வசனம்,குத்து பாடல், நகைச்சுவை என்கிற பெயரில் அபத்தம்,வீணான சண்டை காட்சிகள் ஆகியவற்றின் தொகுப்பான இன்றைய தமிழ் (இந்திய) சினிமாக்களின் நிலையாக இருக்கிறது.
இந்த குப்பைகளில் “நடித்து” கோடிகளில் புரளும் அஜித்,விஜய்,ரஜினி,கமல்,சிம்பு,சூர்யா,தனுஷ் போன்றவர்களின் படங்களை பார்த்துதான் நாம் நம் காலத்தை கடத்த வேண்டியிருக்கிறது,இவர்களுக்கு பாலாபிசேகம் செய்தே நாம் ஓய்ந்துவிட்டோம்.

ஒரு சிறந்த சினிமா என்பது சிறந்த கதை,அதை விட முக்கியம் திரைக்கதை,காட்சிக்கோர்வை,மிகையில்லாத நடிப்பு,சிறந்த ஒளிப்பதிவு,துல்லியமான பிண்ணனி இசை,மற்றும் பல கலைகளின் கூட்டுக் கலவையேயாகும்.இந்த கலவையை கூட ஏதாவது படத்தில் அத்தி பூத்தார் போல பார்த்து விடலாம்,ஆனால் மிக முக்கியமான விசயமான காலம்,சமூகம்,கலாச்சார குறியீடுகள்,வட்டார வழக்கு,சமகால அரசியல்,இலக்கியம்,எதார்த்த மனிதர்களின் வாழ்வியல்,பார்க்கும் பார்வையாளர்களின் திறனை மேம்படுத்துவது போன்ற காட்சிகள் என எந்த அம்சங்களும் நம் படங்களில் இருக்க வாய்ப்பில்லை.

சினிமா என்பது பலரும் “ENTERTAINMENT “ என்ற ஒற்றை நோக்கில்தான் பார்க்கிறார்கள்.ஆனால் சினிமா ஆரம்பிக்கப்பட்டபோது “கலை வடிவம்” ஆகத்தான் ஆரம்பிக்கப்பட்டது.பின்னாளில் பலருக்கு பணமும்,புகழும் அதிகம் கிடைக்கத் தொடங்கியதும் அது வணிகமாக மாறிவிட்டது.
உலகின் அதிகம் படங்களை தயாரிக்கும் நாடுகளில் இந்தியாவும் ஒன்று.ஆனால் நாம் ஒரு ஆஸ்கார் கூட வாங்கவில்லை என்பதுதான் நிதர்சனம்.(ஏ.ஆர்.ரஹ்மான்,பானு அத்தையா, - இவர்கள் வாங்கிய விருது இந்திய படங்களில் பணியாற்றியதற்காக அல்ல)

CANNES FILM FESTIVAL– ஆஸ்கார் விருதைவிட உயரிய விருதாக கருதப்படும் இந்த சந்தையில் கூட நமது படங்கள் பெரிதாக சோபிக்கவில்லை,

”விருதுகள் மேல் நம்பிக்கையில்லை மக்கள் ரசனைதான் முக்கியம்” என்று நேற்று பிறந்த நெல்லி வடையெல்லாம் பேட்டி கொடுத்து நம்மளை மீண்டும் மீண்டும் முட்டாள் ஆக்கி கொண்டு இருக்கிறார்கள்.

உலகின் சிறந்த இயக்குனர்கள் அனைவரும் மக்களுக்காகத்தான் படம் எடுத்தார்கள்.மக்களும் ரசித்தார்கள்;விருதுகளையும் வென்றார்கள்.

தொழில் நுட்ப வளர்ச்சியை மட்டும் வைத்து நாம் வளர்ந்துவிட்டதாக நாம் நினைத்து கொண்டிருக்கிறோம்.அது முற்றிலும் தவறு.ஒரு நல்ல திரைப்படத்திற்கு இது மட்டும் போதாது.நான் மேற்கூறிய அனைத்து காரணிகளும் தேவை.

அண்மை புள்ளி விவரங்கள்படி தமிழ் நாட்டில் கடந்த எட்டு வருடங்களில் கிட்டத்தட்ட 1500 க்கும் மேற்பட்ட திரையரங்குகள் மூடப்பட்டுள்ளது.இதுதான் நம் தமிழ் சினிமாவின் அசுர வளர்ச்சியா?
( தற்போதய எண்ணிக்கை 900 என்று கேள்வி)

சரி இதை மாற்ற வழியில்லையா ? உண்டு; எப்படி?

(தொடரலாம்……)


Tuesday, November 12, 2013

பவா என்றொரு கதை சொல்லியும் நானும்


அண்மையில் இந்த ஆவண வெளியீட்டு விழாவிற்கு சென்றிருந்தேன்.நான் மதிக்கும் ஆதர்சன இயக்குனர்களின் ஒருவரான திரு.பாலு மகேந்திரா அவர்களின் அருகில் உட்காரும் வாய்ப்பு கிடைத்தது.என்ன ஒரு தருணம்.?அவரிடம் பேச வேண்டும் என்று தோன்றவில்லை.காதலியின் கண்களை உற்று நோக்கும் காதலன் போல அவரையே பார்த்து கொண்டு இருந்தேன்.என்ன ஓர் எளிமை அவர் படங்களை போல.அதன் பின்பு அவர் அருகில் சம கால இலக்கிய ஆளுமைகளின் ஒருவரான திரு.ஜெயமோகன் மற்றும் திரு.வண்ண நிலவன்.நான் கனவுலகில் இருப்பது போன்ற ஒரு பிரம்மை.யாரிடமும் துளி பகட்டல் இல்லை.

பின்னர் சில உருப்படியான படங்களை எடுத்து வரும் இயக்குனர் திரு.சேரன் வந்தார்.

நிகழ்ச்சியை தொகுத்து வழங்கியவர் தமிழச்சி தங்கபாண்டியன்.
திரு.பாலு மகேந்திரா பேசும்போது நவீன காமேரக்களுக்கும் இன்றைய காமேரக்களுக்கும் உள்ள வித்தியாசம் பற்றி பேசியது அருமை.

ஆவண பட இயக்குனர் திரு.ஸ்ரீனிவாசன் பேசிய போது ரஜினி,கமல்,சிவாஜி,ஜெயலலிதா போன்ற தமிழ் சினிமா பிரபலங்கள் பற்றி தமிழில் ஒரு ஆவணம் இல்லை என்றார்.இது
மிகவும் நமக்கு அவமானம் ஆகும்.மேலை நாடுகள் போல ஆவண படம் குறித்த எந்த கவலையும் நம்மிடம் இல்லை.

பவா செல்ல துரையின் கதை சொல்லும் திறன் அபாரம்.அவரது உடல் மொழி மிக சிறப்பாக இருந்தது.இயக்குனர் திரு.மிஷ்கின்க்கு பிறகு நான் வியந்தது பவா அவர்களின் உடல் மொழிதான்.

வாழும் போது தமிழர்கள் யாரையும் கொண்டாடவில்லை என்று பலரும் குறை பட்டார்கள்.சரிதான்.பாரதி,புதுமைபித்தன்,கண்ணதாசன்,நடிகர்.நாகேஷ் , என அடுக்கி கொண்ட போகலாம்.செத்தவர்களுக்கு சிலை வைத்து அழகு பார்ப்பதுதான் நம் பண்பாடு.

பாவாவின் மானுடம் பற்றிய புரிதலும்,அதன் மேல் உள்ள காதலும் எப்படி இந்த கேடு கேட்ட உலகத்தில் இவரால் மட்டும் இப்படி தன்னலம் அற்று இயங்க முடிகிறது என்று பொறாமையாக
இருக்கிறது.வாழ்வின் உதிரி மனிதர்களை பற்றி எப்படி இவரால் மட்டும் சிந்திக்க முடிகிறது? 
விளிம்பு நிலை மனிதர்களின் மேல் உள்ள பரிவும், நேசமும் அவர் படைப்புகளில் அப்படியே தெரிகிறது.

சம கால எழுத்தாளர்களின் பவாவின் பங்களிப்பு நிச்சயம் தன்னிகரற்றது.


Saturday, November 9, 2013

பெண்ணியம்

பெண்ணியம்
அண்மையில் முக நூலில் ' பெண்ணியம்' பற்றி பல பதிவுகளை படிக்க நேர்ந்தது.அதையொட்டி என் கருத்து இது.வீட்டில் எந்த வேலையிலும் பங்கு பெறாமல் பெண்ணியம் பற்றி ஜல்லி அடிப்பவர்களை கண்டால் நகைப்புதான் வருகிறது.இது எப்படி இருக்கிறது ஒரு பக்கம் கம்யுனிசம் பேசி கொண்டே  யாருக்கும் தெரியாமல் கோயிலுக்கு செல்வது போல இருக்கிறது.தேனீர் கோப்பையை கூட கழுவாமல்,மனைவிக்கோ,அம்மாவுக்கோ,எந்த உதவியும் செய்யாமல் வீட்டில் கணினியையோ,புத்தகத்தையோ கட்டி பிடித்து கொண்டு இருந்துவிட்டு  வெளியில் பெண்ணியம் பேசும் வாய் சொல் வீரர்களை கண்டால் என்ன சொல்வது? மாற்றம் என்பது நம்மில் இருந்துதான் தொடங்க வேண்டும்.இதை விட பெண்ணியம் பற்றியோ, பெரியார் பற்றியோ ஏதும் அறியாமல் வீட்டில் பெண்களுக்கு பேருதவியாக இருக்கும் ஆண்கள் எவ்வளவோ மேல்.

பெண்ணியம்

பெண்ணியம்
அண்மையில் முக நூலில் ' பெண்ணியம்' பற்றி பல பதிவுகளை படிக்க நேர்ந்தது.அதையொட்டி என் கருத்து இது.வீட்டில் எந்த வேலையிலும் பங்கு பெறாமல் பெண்ணியம் பற்றி ஜல்லி அடிப்பவர்களை கண்டால் நகைப்புதான் வருகிறது.இது எப்படி இருக்கிறது ஒரு பக்கம் கம்யுனிசம் பேசி கொண்டே  யாருக்கும் தெரியாமல் கோயிலுக்கு செல்வது போல இருக்கிறது.தேனீர் கோப்பையை கூட கழுவாமல்,மனைவிக்கோ,அம்மாவுக்கோ,எந்த உதவியும் செய்யாமல் வீட்டில் கணினியையோ,புத்தகத்தையோ கட்டி பிடித்து கொண்டு இருந்துவிட்டு  வெளியில் பெண்ணியம் பேசும் வாய் சொல் வீரர்களை கண்டால் என்ன சொல்வது? மாற்றம் என்பது நம்மில் இருந்துதான் தொடங்க வேண்டும்.இதை விட பெண்ணியம் பற்றியோ, பெரியார் பற்றியோ ஏதும் அறியாமல் வீட்டில் பெண்களுக்கு பேருதவியாக இருக்கும் ஆண்கள் எவ்வளவோ மேல்.

Monday, October 21, 2013

தோல்வியுற்றவர்களின் சரித்திரம்!

வாழ்வில் "வெற்றி" பெறுவது என்றால் என்ன?
"வெற்றி" என்ற சொல் நம் சமுகத்தின் பார்வையில் வேறு வேறாக இருக்கிறது.
உதாரணத்திற்கு: பணம் என்றால் அதன் அளவு கோல் எது?
லட்சமா? கோடியா? அடுத்த தலைமுறைக்கான சொத்து சேர்த்து வைப்பதா?
படிப்பு பணம் என்றால் அதன் அளவு கோல் எது?
வாழ்கையில் உச்ச பட்ச படிப்பு எது?
டாக்டரா?வக்கீலா?மேலாண்மையா?பொருளாதாரமா? எது உயர்ந்த படிப்பு?
பண்புகள் என்றால் அதன் அளவு கோல் எது?
நல்லொழுக்கம்,கடமை தவறாமை,நேரம் தவறாமை,சுய கட்டுப்பாடு, என்று அடுக்கி கொண்டே போகலாம்.
ஆக ”வெற்றி” என்ற சொல்லுக்கு பொருள் இடத்திற்கு இடம் மாறுபடுகிறது.
இப்படி இருக்கையில் நம் சமூகம் கண்மூடித்தனமாக நம்மை வாழ்க்கையில் வெற்றி பெற வேண்டும் என்று தூண்டுவது ஒரு மாய மானை துரத்துவது போல் துரத்த சொல்கிறது.
நம் இளமை பிராயத்தில் ”வெற்றி” என்ற சொல் பள்ளியில் ஆரம்பிக்கிறது.
உதாரணத்திற்கு: வகுப்பில் முதலிடம்,கட்டுரை போட்டியில் வெல்வது,பாட்டு போட்டியில் முதலிடம் போன்ற விடயங்களில் ஆரம்பிக்கிறது.
பின்னர் கல்லூரி காலத்திலும் அதே கதைதான்.
வேலைக்கு செல்லும் காலத்தில் மற்றவனை விட அதிகம் சம்பாதிப்பது,உயர் பதவிகளை அடைய போட்டி,வீடு வாங்குவதில் தொடங்கி அனைத்திலும் இந்த போட்டி மனப்பான்மை நிலவுகிறது.
திருமணம் செய்வதில் கூட அடுத்தவரை விட நல்ல மனைவியோ,கணவனோ கிடைப்பதில் தொடங்கி,வரதட்சணை வாங்குவதில்,திருமணத்தை ஆடம்பரமாக நடத்துவதில் என எல்லாத்திலும் இதே போட்டி தான்.
வயோதிக காலத்தில் புண்ணிய ஸ்தலங்களை ரசிப்பதில் கூட அடுத்தவர்களை விட அதிகம் ஆர்வம் காட்டுவதால் ஏற்பட்ட சேதத்தை அண்மையில் நமக்கு இயற்கை உணர்த்தியது.
ஆக நாம் கருவறை முதல் கல்லறை வரை ஓடு,ஒடிக்கொண்டே இரு நம் சமூகம் நம்மை துரத்துகிறது.
வாழ்க்கை என்கிற அற்புத தேனீரை அணு அணுவாக பருகத் தெரியாத அவசர உலக மனிதர்களாக நாம் மாறிவிட்டோம்.
என் கேள்வி இதுதான் :
1.பள்ளியிலோ,கல்லூரியிலோ முதலிடம் தான் ”வெற்றி” என்றால் அங்கு சென்று படிக்க வசதியில்லாதவர்களை என்ன செய்வது?
2.வேலையில் அதிக பணம் சம்பாதிப்பது என்றால் நாட்டில் வேலை இல்லாமல் அவதிப்படுபவர்களை என்ன செய்யலாம்?
3.சொந்த வீடுதான் வாழ்வின் உச்ச பட்ச வெற்றி என்றால் வீடு கூட இல்லாத விளிம்பு நிலை மனிதர்களை என்ன செய்வது?

பதில் தெரிந்தவர்கள் தயவு செய்து கூறலாம்.

என் நினைவு தெரிந்த நாட்களில் (1991) நம்மிடையே வெற்றி,தோல்வி குறித்த சிந்தனை பெரிதாக இருந்ததில்லை.
ஆனால் இன்று உலகமயமாக்கப்பட்ட இந்த உலகத்தில் (நரகத்தில்) வெற்றி என்பது போதை பொருளை விட மோசமான ஒன்றாகி விட்டது.

குறிப்பாக இந்தியாவில் சுய முன்னேற்றம் குறித்த புத்தகங்கள் இந்த அளவில் அதிக விற்பனை ஆவதே பொருளாதாரமயமாக்கலுக்குப் பிறகுதான்.

எம்.எஸ்.உதய மூர்த்தி, ஷிவ் கேரா,லேனா தமிழ் வாணன்,ராபர்ட் கியோஸ்கி இவர்கள் “ வெற்றி” பெற்றதே நம்மால் தான்.
பள்ளியில் குழந்தைகளை சேர்ப்பதில் தொடங்கிகிறது நம் வணிக உலகம்.
அவர்களை பணம் சம்பாதிக்கும் இயந்திரங்களாக பார்க்க தொடங்கி விட்டோம்.
மருத்துவ சீட்டுக்கு இத்தனை லட்சம்,பொறியியல் மற்றும் கணிணி படிப்புக்கு இத்தனை லட்சம் என்று நாம் செலவழிக்க தொடங்கி இருப்பது நமக்கு நம் குழந்தைகள் மீதான அக்கறையை காட்டவில்லை ; அப்பொழுதுதான் அவர்களால் எதிர் காலத்தில் சம்பாதித்து கொட்ட முடியும் என்கிற வணிக மனப் பான்மை.

கோடை விடுமுறை காலங்களில் சொந்த ஊர்க்கோ, தாத்தா அல்லது பாட்டி வீட்டுக்கோ செல்வெதெல்லாம் மலையேறி விட்டது.அந்த நாட்களிலும் சம்மர் கேம்ப்,கணிணி வகுப்பு,அடுத்த ஆண்டிற்கான பாடத்திட்டத்தை இப்பொதே படிப்பது என்ற அவசர யுகத்தில் நம் குழந்தைகள் அல்லல் படுகிறார்கள்.
பள்ளியிலோ,கல்லூரியிலோ முதலிடம் பிடித்தவர்களை தூக்கி கொண்டாடும் நம் சமூகம் தோல்வியுற்றவர்களை திரும்பி கூட பார்ப்பதில்லை.
சொந்த வீடு இல்லாதவனை ஒரு புழுவை விட கேவலமாக பார்க்கும் பழக்கம் நம்மிடம் இருக்கத் தானே இருக்கிறது.
ஒரு கல்யாண வீட்டிலோ, பிறந்த நாள் கொண்டாட்டங்களில் எந்த பெண்ணாவது குறைந்த நகையுடனோ அல்லது நகையில்லாமல் வந்தால் அவருடன் பேச கூட நம்மில் பலர் முன் வருவதில்லை.
இந்த கெடு கெட்ட வணிக உலகில் தோல்வியுற்றவர்களை பற்றிய இலக்கியமோ,திரைப் படமோ,வாழ்க்கை வரலாறோ கூட இங்கு கிடையாது என்பதே நிதர்சனம்.
ஆக பொருளாதாரத்தினாலோ,சமூக அந்தஸ்தினாலோ உயர்வு அடைவதையே “வெற்றி” என்கிற ஒரு வகையானோ கட்டமைப்பு உள்ளது.இது முற்றிலும் தவறான அணுகு முறையாகும்.

எல்லாரலும் பில் கேட்ஸாகவோ, அப்துல் கலாமாகவோ,சச்சின் டெண்டுல்கராகவோ ஆக முடியாது,ஆனால் ஒவ்வொரு தனி நபருக்குள்ளும் சில திறமைகள் ஒளிந்து இருக்கிறது.அதை கொண்டு நாம் நம் வாழ்க்கையை வாழலாம்.அது எதுவானாலும் அதை யாருடனும் ஒப்பிட்டு பார்க்காமலும்,யாரை பற்றியும் உயர்வாகவோ,தாழ்வாகவோ எண்ணமால் நமக்கான வாழ்வை நாம் வாழ முயற்சிக்கலாம்.








Friday, October 11, 2013

நமக்குத் தேவை ஜெயகாந்தன்கள் - தி இந்து

நமக்குத் தேவை ஜெயகாந்தன்கள் - தி இந்து

வேற்று கிரக வாசி எனும் அல்வா.

ANCIENT ALIENS?


ஹிஸ்டரி டிவி 18

இந்த நிகழ்ச்சி சற்று சுவாரஸ்யமாக இருக்கிறது ஆனால் ஐன்ஸ்டீன்,கலி லியோ,ராமானுஜர் எல்லாம் வேற்று கிரக வாசி என்கிற ரீதியில் அள்ளி விடுகிறார்கள்.
விட்டால் சந்தானம், பவர் ஸ்டார் ,மன்மோகன் சிங்க்,ராமராஜன் எல்லாம் கூட  வேற்று கிரக வாசி என்று ஜல்லி அடிப்பார்கள் போல.

எல்லாம்  அந்த  இயற்கைக்குத்தான் வெளிச்சம்.

முடியலடா நாராயணா!


Monday, September 30, 2013

என்ன கொடுமை மேடம் இது?



இந்திய சினிமா 100 ஆண்டு  கொண்டாடும் இந்த நேரத்தில் கண்ட குப்பை படங்களை சிறந்த படமாக திரையிட்டு  சினிமா துறைக்கு கொஞ்ச நஞ்சம் இருந்த மதிப்பை கெடுத்து விட்டனர்.
(பல்லாண்டு வாழ்க ,அடிமை பெண் இந்த கருமம் எல்லாம் சிறந்த படம் என்று சொன்னால் ..ஐயகோ ...)


இது என் பார்வையில்

உண்மையான திரை மொழியில் உருவாக்கப்பட்ட 10 திரை படங்களை பட்டியலிட்டு இருக்கேன்

1.வீடு
2.அவள் அப்படித்தான்
3.சந்தியா ராகம்
4.நாயகன்
5.16 வயதினிலே
6.உதிரிப் பூக்கள்
7.முள்ளும் மலரும்
8.அன்பே சிவம்
9.சில நேரங்களில் சில மனிதர்கள்..
10.ஆரண்ய காண்டம்


இதற்க்கு மாற்று கருத்து உள்ளவர்கள் தங்கள் பார்வைக்கு தெரிந்த சிறந்த படங்களை எனக்கு பரிந்து உரைக்கலாம் .





Tuesday, September 3, 2013

கடவுள் இருக்கிறாரா?

கடவுள் இருக்கிறாரா? - என் பார்வையில் 

பல வருடங்களாக,யுகங்களாக இந்த விவாதம் இன்னும் சூடு குறையாமல் தொடர்ந்து கொண்டு இருக்கிறது.நான் இல்லை என்றால் நீங்கள் நம்ப போவதும் இல்லை;இருக்கு என்றாலும் ஒத்துக்க போவதில்லை.சரி,இதை படிப்பதற்கு முன்னால் சற்று என் சுய  புராணத்தை கேட்போமா?

நான் பிறப்பால் இந்து குடும்பத்தை சார்ந்தவன் சுமார் 10 அல்லது 11 வயது வரை தீவிர ஆத்திகனாக வளர்க்க பட்டேன்.பொதுவாக அனைவரும் இந்த வயதில் கடவுள் மற்றும் பேய் குறித்த சந்தேகங்கள் தோன்றும் எனக்கும் தோன்றியது. 
என் பக்கத்து வீட்டில் 25 வயது மதிக்கதக்க ஒருவர் இருந்தார்,அவரிடம் சென்று என் கேள்விக்கணைகளை தொடுத்தேன்.கடவுள் இருப்பது உண்மையா?,நாம் இந்த பூமிக்கு ஏன்,எதற்கு, எப்படி வந்தோம்?நாம் பூமி மீது நடக்கிறோமா அல்லது பூமி பந்தின் உள்ளே இருக்கிறோமா?போன்று பல கேள்விகளை கேட்டேன்.அவர் கூறிய பதில் மிக விந்தையாக இருந்தது.அவர் என்ன கூறினார் தெரியுமா? "இந்த அனைத்து கேள்விக்கும் விடை உன் அறிவியல் மற்றும் வரலாறு பாடத்தில் இருக்கிறது" ஆனால் அந்த பாடங்களை மனப்பாடம் செய்யாமல் படிக்க வேண்டும்" அப்பொழுதுதான் உன் கேள்விக்கு விடை கிடைக்கும் என்றார்.அது வரை மனப்பாடம் செய்து வந்த நான் சற்று புரிந்து படிக்க தொடங்கினேன்.சுமார் பத்தாம் வகுப்பு வரை உள்ள அனைத்து அறிவியல் மற்றும் வரலாறு பாடத்தை விரும்பி படித்தேன்.அதோடு மட்டும் இல்லாமல் "துளிர்" என்ற அறிவியல் இதழின் அமைப்பின் சார்பில் நடக்கும் கருத்தாய்வு,அறிவியல் வினா- விடை போன்ற நிகழ்வுகளும் எனக்குள் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியது.

பள்ளி பாடத்தை தவிர்த்து எனக்குள் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியது திரு.சுஜாதாவின் "ஏன்,எதற்கு,எப்படி?","கற்றதும் பெற்றதும் " போன்ற தொடர்கள்தான்,ஆனால் சுஜாதாவின் பதிலில் இருந்த குழப்பத்திற்கு எனக்கு விடை கிடைக்க இல்லை.பின்னர் நியூட்டனின் புவிஈர்ப்பு விசை, டார்வின் கோட்பாடு,ஐன்ஸ்டீனீன் பௌதீக தத்துவம் மற்றும் பிரபஞ்சம் பற்றிய அவரின் புரிதல் அனைத்தும் எனக்குள் இருந்த ஆத்திக நம்பிக்கைகளை தகர்த்து எரிந்தது.
பின்னர் தான் எனக்கு புத்தர்,ஆதி சங்கரர்,பெரியார் போன்றோர் அறிமுகம் ஆனார்கள்.அதன் பின்பு அறிவியல் மற்றும் விண்வெளி குறித்த செய்திகளை தேடி பிடித்து படித்தேன்.குறிப்பாக பிரபஞ்சம் தோன்றிய விதம்,ஒளியின் வேகம்,மனிதனின் பரிணாம வளர்ச்சி,பூகம்பம்,மழை,இடி,மின்னல்,விண் கற்கள் போன்ற செய்திகளை படித்தேன்.படித்து கொண்டே இருக்கிறேன்.
எனக்குள் பல கேள்விகள் எழத் தொடங்கின குறிப்பாக மதம்,சாதி,சடங்குகள்,மத நூல்கள் போன்ற பலதும் எதற்காக உருவாக்கப்பட்டன என்று? இதற்கான விடை தேடும் என் பயணம் பெரியாரையும்,அம்பேத்காரையும் படிக்கும் பொழுது புரிந்தது,இவை அனைத்தையும் பணம் சம்பாதிக்கும் கருவியாக மனிதன் பின்னாளில் மாற்றி விட்டான் என்று.ஆத்திகம், நாத்திகம் எல்லாம் கற்பிதம் மட்டும் என்பது புரியும் பொழுது என் அகவை 18.

எனக்கு தெரிந்த சில நாத்திகர்கள் தான் எதற்கு நாத்திகவாதி ஆனோம் என்றே தெரியாமல் நாத்திகம் பேசுகிறார்கள் காரணம் கேட்டால் " பெரியார் சொன்னார்", என்றும் "கடவுள் நான் கேட்டதை தரவில்லை அந்த கோவத்தில் மாறினேன்" என்கிறார்கள். இது முற்றிலும் தவறு.
அறிவியலின் ஆழத்தயும், அதன் உண்மைகளையும் உணர்த்து அறிவு பூர்வமாக வரும் இறை மறுப்பே இறுதி வரை நீடிக்கும்.மற்றவர்கள் பாதியிலயே மறுபடியும் ஆத்திக வேடம் போடும் நிலைக்கு தள்ள படுவார்கள்.அப்படி மாறிய பலரையும் நான் பார்த்து இருக்கிறேன்.

என்னை சிலர் கடவுள் இல்லை என்று கூறுவதால் நாத்திகவாதி என்றும்,தொழிலாளிகள் கஷ்டம் பற்றி பேசினால் கம்யூனிஸ்ட் என்றும்,புதிய பொருளாதார கொள்கைக்கு எதிராக பேசினால் சோசலிஸ்ட் என்றும், ஈழம் பற்றி வாய் திறந்தால் தீவிரவாதி போலவும் பார்கிறார்கள் நான் என்ன செய்ய..    

தலைப்பு மாறி எங்கோ சென்று விட்டேன் ... மன்னிக்கவும் 

கடவுளின் இருப்பு என்பது எப்படி சத்தியம் என்று பார்ப்போம்.

கடவுள் (உலகை அல்லது) பிரபஞ்சத்தை படைத்தார் என்பது மதங்களின் கருத்து, ஆனால் அறிவியல் பிரபஞ்சம் என்பது ஒரு பெரு வெடிப்பு (Big Bang) மூலம் தான் இந்த பிரபஞ்சம் சில ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு தோன்றியது என்று வரை கண்டு பிடித்து இருக்கின்றனர்.அதோடு மட்டும் நின்று விடாமல் இந்த பெரு வெடிப்பு என்பது தொர்ச்சியாக நடக்கும் செயல் என்றும் கண்டு பிடித்து இருக்கின்றனர்.

சுமார் 1370 கோடி ஆண்டுகளுக்கு முன்பு ஏற்பட்ட அந்த 'மா வெடிப்பு' முதல் முறையாக நடந்தது அல்ல, அது தொடர்ந்து பல முறை நடந்து இருக்கின்றது -அதாவது ஒரு மா வெடிப்பிலிருந்து ஒரு பிரபஞ்சம் உருவாகி அது போதிய அளவு விரிந்த பின், ஈர்ப்பு விசையினால் பிரபஞ்சம் மீண்டும் சுருங்கி ஒரு புள்ளியாகி பிறகு மீண்டும் மாவெடிப்பு ஏற்பட்டு விரிவடைகின்றது என்று சில விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.ஆனால் மதங்கள் எந்த காலத்திலும் இது போன்று உண்மைக்கு நெருக்கமாக நம்மை இட்டு சென்றதில்லை. 






ஆகையால் நாம் தான் இங்கு வாஸ்து,சோதிடம்,ஜாதகம்,அதிர்ஷ்டம்,  நல்ல நேரம்,எமகண்டம்,சொர்க்கம் ,நரகம்,இம்மை, மறுமை,மறுபிறவி. சகுனம்,மந்திரம்,சடங்கு,சம்பிரதாயம்,இயேசு உயிர்த்து எழுவார், கலியுகம்,இறை தூதர் வருவார் போன்ற மூட நம்பிகைகளை வளர்த்து நமது நேரத்தை வீணடித்து கொண்டு இருக்கிறோம். 

அதையும் மீறி கடவுள் நம்பிக்கை உள்ளவர்களுக்கு ஒன்று சொல்லிக்க ஆசை படுகிறேன்  உலக விஞ்ஞானிகளின் முன்னோடி ஐன்ஸ்டீன் ஒரு பேட்டியில் "கடவுள் இருக்கிறாரா?" என்ற கேள்விக்கு "கடவுள் இருக்கிறாரா இல்லையா என்பதை அறுதியிட்டு கூற முடியாது ஆனால், நம் அன்றாட செயல்களை நிர்ணயிப்பது கடவுள் அல்ல நாம்தான் " ஆகவே கடவுளை விட்டு விட்டு கண் முன்னேவாழ்கையை ரசிப்போம். இருக்கும் மனிதர்களை மதிப்போம்,அவர்களிடம் அன்பு பழகுவோம்.அன்பு பழகுவர்களை "நாத்திகவாதி "என்ற குறுகிய வட்டத்திற்குள் அடைக்காமல் அவர்களை "பகுத்தறிவாளர்கள்" என்று அன்போடு அழைப்போம்.

"கடவுளை மற; மனிதனை நினை" 




நோவா’வின் படகு (Ship of Theseus)

நோவா’வின் படகு (Ship of Theseus)

திரைவானில் தனிப்பெரும் ஆற்றலுடன் மின்னும் ‘தங்க மீன்கள்’

திரைவானில் தனிப்பெரும் ஆற்றலுடன் மின்னும் ‘தங்க மீன்கள்’

Thursday, May 9, 2013

தங்க மீன்கள் - Awesome trailer

தங்க மீன்கள்


அண்மையில் "தங்க மீன்கள்" பட முன்னோட்டம் கண்டேன்.இது வரை எந்த திரை படமும் என்னை இவ்வளவு வெகுவாக பாதித்ததில்லை.கண்களில் கண்ணீர் வர வைக்கும்."கற்றது தமிழ்" திரு.ராமின் இரண்டாவது படைப்புதான் "தங்க மீன்கள்".

"மகள்களை பெற்ற அப்பாகளுக்குதான் தெரியும் முத்தம் காமத்தில் சேர்ந்தது இல்லை என்று"- எவ்வளவு சத்தியமான வார்த்தை.

அண்மையில் நடிகர் சிம்பு ஒரு பேட்டியில் "தான் பார்த்த சிறந்த trailer ஆக " தங்க மீன்களை, குறிப்பிட்டு இருக்கிறார்.

இந்த படம் வெற்றி பெற நாம் வாழ்த்துவோம்.

படத்தின் முன்னோட்டம் காண கீழே உள்ள லிங்கை கிளிக்கவும்.

http://m.youtube.com/watch?v=DQVvcCvv9-Y

Monday, May 6, 2013

இந்திய சினிமா வயது 100


இந்திய சினிமா வயது 100.

என் நண்பனுக்கும் எனக்கும் நடை பெற்ற உரையாடல்.

"உனக்கு சினிமா தவிர வேற ஏதும் தெரியாதா?

"ஏன் என்றால், இந்த நூற்றாண்டின் மிக பிரமாண்டமான ராட்சச கலை, "சினிமாதான்".

இந்தியாவில் அந்த சினிமாவிற்கு வயது நூறு.

இந்த பொன்னான தருணத்தில் நமது தமிழ் சினிமாவின் சாதனை மற்றும் சோதனைகளை பார்ப்போம்.
முதலில் பேசா படமாக இருந்த சினிமா "காளிதாஸ் "(1931) படம் மூலம் பேசும் படமாக மாறியது.நாடகத்தில் இருந்து மாறியதால் தமிழ் சினிமா நாடகத்தன்மையுடன் விளங்கியது.பின்னர் 1954ல் வீணை பாலசந்தர் இயக்கத்தில் வெளி வந்த "அந்த நாள் " ஒரு சிறந்த திரை படத்திற்கான 
அனைத்து கூறுகளையும் கொண்டு இருந்தது.
பின்னர் இயக்குனர் திரு.ஸ்ரீதர் அவர்களின் வருகைக்கு பிறகு கொஞ்சம் சினிமாவின் நிறம் மாறத் தொடங்கியது.உதாரணத்திற்கு அவரின் "நெஞ்சில் ஓர் ஆலயம்" (1961) பின்னர் முழு நீள நகைச்சுவை படமான "காதலிக்க நேரமில்லை" (1964) கருதலாம்.ஆனால் சினிமா எப்பொழுதும் வர்த்தகர்களின் கையில் இருப்பதால் மறுபடியம் நாடகம்தான்.
100 திரைப்படங்களை எடுத்தேன் என்று தம்பட்டம் அடிக்கும் திரு.கே.பாலசந்தர் அவரும் அதே நாடகங்களை "வித்தியாசமாக" அரங்கேற்றினர்.
பின்னர் (1977) தமிழ் சினிமாவின் பொற்காலம் தொடங்கிய நேரம் திரு.பாரதிராஜா எனும் புயல் தமிழ்  சினிமாவை மையம் கொண்டது."16 வயதினிலே"இந்த படம் அனைத்து விதிகளையும் உடைத்தது.ஸ்டுடியோவில் இருந்த சினிமா சுதந்திரம் பெற்றது.நிஜ மனிதர்களை நமக்கு அறிமுகபடுத்தியது.அதே வருடம் வந்த திரு.ஜான் ஆபிரகாமின் "அக்ரகாரத்தில் 
கழுதை" மிக சிறந்த படம் ஆகும்.
பின்னர் திரு.ருத்ரையா இயக்கத்தில் வெளி வந்த "அவள் அப்படித்தான்" (1978)  என்ற படம் ஓர் "மாற்று சினிமா"என்று கூறலாம்.அதே வருடம் வெளி வந்த திரு.மகேந்திரனின் "முள்ளும் மலரும்" இலக்கியத்தை சினிமாவில் நுழைக்கும் புதிய யுக்தியை உண்டாக்கினார்.1979 ல் வந்த "உதிரிப் பூக்கள் " மற்றும் த.துரை இயக்கத்தில் வெளி வந்த "பசி" படங்கள் பெரிய தாக்கத்தை உண்டாக்கியது என்றே கூறலாம்.மறுபடியும் வணிக மசாலாவில் சிக்கிய சினிமாவை திரு.பாலு மகேந்திராவின் "வீடு " மற்றும் "சந்தியா ராகம்" மீட்டது.இதில் "வீடு"படம் NFDC ஒரு ஆவணமாக வைத்து உள்ளார்கள்.பின்னர் 1987ல் வெளியான "நாயகன்" மிக பெரிய அதிர்வலைகளை உண்டாக்கியது."டைம்ஸின்"மிக சிறந்த 100 படங்களில் இந்தியாவில் இருந்து தேர்ந்து எடுக்கப்பட்ட 3 திரை படங்களில் நாயகனும் ஒன்று.பின்னர் மறுபடியும் சுணக்கம் கண்டது நம் தமிழ் சினிமா,அப்பொழது (1999) வெளியான திரு.பாலாவின் "சேது"மறுபடியம் நம்பிக்கையை தந்தது.
பின்னர் வெளிவந்த "அழகி","ஆட்டோகிராப்" போன்ற சில முயற்சிகளை கூறலாம்.2003ல் வெளி வந்த திரு.கமலஹாசனின் "அன்பே சிவம்" ஒரு சிறந்த கம்யுனிச சித்தாந்ததை கொண்டு சிறப்பாக வடிவமைக்க பட்ட படமாகும்.2007ல் வெளி வந்த திரு.ராமின் "கற்றது தமிழ்" உலக மயமாக்கலின் பிரச்னை பற்றி பேசியது.பின்பு திரு.ராதா மோகனின் "மொழி",திரு.வசந்த பாலனின் "அங்காடி தெரு",திரு.அமீரின் "பருத்தி வீரன் ",திரு.வெங்கட் பிரபுவின் "சென்னை 600 028.",போன்ற நல்ல முயற்சிகளை பாராட்டலாம்.ஆனால்  யாரும் தொடர்ச்சியாக தரமான படங்களை தர முடிய வில்லை.2011ல் வெளி வந்த திரு.தியாகராஜ குமார ராஜாவின் "ஆரண்ய காண்டம்"விளிம்பு நிலை மனிதர்களின் வாழ்வியல் பற்றிய ஒரு சிறந்த உருவாக்கம் ஆகும்.2012ல் வெளி வந்த திரு.பாலாஜி சக்திவேலுவின் " வழக்கு எண் 18/9" ஒரு கீழ் தட்டு மக்களின் காதலையும்,அவர்களின் வலியையும் அழகாக பதிவு செய்தது.
ஆனால் தமிழ் சினிமாவின் புதிய அலை அண்மையில் வீச தொடங்கியுள்ளது.குறும் பட இயக்குனர்களின் வருகை அதிகரித்து உள்ளது,இதனால் பல இளையர்கள் தமிழ் சினிமாவின் இலக்கணத்தை தங்கள் படம் மூலம் உடைக்கத்தொடங்கி உள்ளனர்.உதாரணம் "அட்டகத்தி","பீட்சா","நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்","காதலில் சொதப்புவது எப்படி", "சூது கவ்வும்" இதன் மூலம் குறைந்த செலவில் புதிய முகங்களை வைத்து புதிய தொழில் நுட்பத்துடன் உலக சினிமாவின் தரத்தை எட்டி பிடிக்கும் முயற்சியில் இறங்கி உள்ளனர்.

பொது புத்தியில் 100 கோடி செலவில் எடுத்தால் அதுதான் "உலக சினிமா"என்று தவறாக நினைத்த கொண்டு உள்ளார்கள்.எந்த படம் நமது கலாச்சாரத்தையும்,நம் சமூகத்தையும்,நம் காதலையும்,நம் வீரத்தையும்,நம் வாழ்வியலையும் திரை மொழி வடிவத்தில் மிகை தன்மை இல்லாமல் சொல்லுகிறதோ அதுவே உலக சினிமாவாகும்.ஓர் ஆரோக்கிய சூழல் ஆரம்பித்து உள்ளதாக எனக்கு தோன்றுகிறது.நல்ல சினிமாவை எடுக்க துணியும் அனைவருக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றிகள்.







Sunday, May 5, 2013

ஆரண்ய காண்டம் .....


நண்பர்களே.அண்மையில் ஆரண்ய காண்டம் படம் பார்த்தேன்.
நிச்சயம் தமிழ் சினிமாவின் நிறம் மாறத் தொடங்கி இருக்கிறது.
இதுவரை பார்த்த எந்த படமும் இவ்வளவு பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை.இந்த படத்தை தவற விட்டவர்கள்,தேடி பிடித்து பாருங்கள்.
யுவனின் பின்னணி இசை அற்புதம். வினோத் - ஓளிப்பதிவு அருமை.
சம்பத் மற்றும் ஜாக்கி ஷெரொப்ப் நடிப்பு அத்தனை இயல்பு.
வசனம் சான்சே இல்லை.
உதாரணம்
1.டேய் திருடிட்டு வந்தியா? இல்லை எடுத்துட்டேன்.
2.சப்பையும் ஆம்பிளைதான்,எல்லா ஆம்பிளையும் சப்பைதான்.
இந்த படத்தை தைரியமாக தயாரித்த S.P.B.சரணுக்கு பாராட்டுக்கள்.

Thursday, January 31, 2013

நகைச்சுவை இறந்த தினம்!

இன்று நகைச்சுவை இறந்த தினம். ஆம் இன்று நடிகர்  திரு.நாகேஷ் மறைந்த  நாள்.தமிழ் சினிமாவின் நகைச்சுவை சிகரம் எனலாம்.இன்றும் பலரும் திரு.நாகேஷ் பாணியில் நடிப்பதை பார்க்கிறோம்.எண்ணிலடங்காத  படங்களில் தம் நகைச்சுவையால் நம்மை சிரிக்க வைத்துள்ளார்.உதாரணம் சர்வர் சுந்தரம்,தில்லான மோகனம்பாள்,காதலிக்க நேரமில்லை,திருவிளையாடல்,எதிர் நீச்சல் இப்படி அடுக்கி கொண்டே போகலாம்.இம்மகத்தான கலைஞனக்கு எந்த விருதும் தரப்படவில்லை  என்பது நமக்கு வேதனை அளிக்கிறது.இவருக்கு இந்நாளில்  நம் அஞ்சலியை செலுத்துவோம்.