2013 - திரும்பி
பார்க்கிறேன்……
எனக்கு நாள்,வாரம்,மாதம்,வருடம்
போன்ற எந்த மனிதனின் கற்பிதங்களிலும் நம்பிக்கை இல்லை;” நாளை மற்றொரு நாள்” என்பதில்தான்
எனக்கு நம்பிக்கை, இருந்தாலும் இந்த பதிவை எழுதுவதில் எந்த கூச்சமும் இல்லை என்பது
நகைமுரண்.
ஒவ்வொரு வருடத்தின்
முடிவிலும் அந்த வருடத்தின் முக்கிய நிகழ்வுகளை அசை போடுவதில் நமக்கொரு அலாதி சுகம்தான்.அப்படித்தான்
இந்த பதிவும்.
33 வருட வாழ்க்கையில்
மிக மோசமான நிகழ்வுகளை சந்தித்திருக்கிறேன்.சில நல்ல நிகழ்வுகளும் நடந்தன.
தீதும் நன்றும்
பிறர் தர வாரா எனும் பழமொழியை தீர்க்கமாக நம்புபவன் நான்.அதனால் நடந்த எந்த நிகழ்வுகளுக்கும்
நானே தார்மீக பொறுப்பேற்கிறேன்.
இந்த வருடத்தில்
கற்ற பாடங்கள் இன்னும் எத்தனை பல்கலைகழகங்கள் சென்று கற்றாலும் கிடைக்காத அனுபவத்தை
கொடுத்தன.
”இடுக்கண் வருங்கால்
நகுக” என்னும் குறள் மிகப் பெரிய வன்முறையாகப் பட்டது, எனக்கு பலரும் அதை தவறாக புரிந்து
கொண்டு என் துன்பத்தில் அவர்கள் சிரித்தனர்.பரவாயில்லை.
எனக்கு நண்பர்கள்
யாரென்பதை புரியவைத்த ஆண்டு இது.ஒரு சில நல்ல உள்ளங்களைத் தவிர மற்றவர்கள் அனைவரின்
சுயரூபத்தையும் புரிய வாய்ப்பு கிடைத்தது.ஆனாலும் நட்பின் இலக்கணம் மீது எனக்கு இன்னும்
நம்பிக்கை இருக்கிறது.நட்பு என்பது பல வருட பழக்கம் என்பதை நாம் இன்னும் தப்பாகப் புரிந்து
கொண்டிருக்கிறோம்.நல்ல நட்பிற்கு நாள்,கிழமை கிடையாது.இது என் புரிதல்.
வாழ்க்கை என்பதை
வெற்றி,தோல்வி எனும் வியாபாரமாக பார்க்கும் பழக்கம் என்னிடமில்லை அதை ஒரு பயணமாக மட்டுமே
பார்க்கிறேன்.அதனால் பொருளாதார ஏற்றத் தாழ்வுகள் என்னை பாதிப்பதை நான் அனுமதிப்பதில்லை.மாறாக
இந்த சமூகத்தின் ஊற்றுக்கண் என்னை ஒரு வியாபாரியாக எடைபோடுகிறது.நான் சம்பாதிக்கும்போது
என்னை பாராட்டுவதும்,சறுக்கும்போது என்னை எள்ளி நகையாடுவதையும் வழக்கமாக வைத்திருக்கிறது
இது எனக்கு பெரிய அபத்தமாகப்படுகிறது.என்னை, என் வாழ்க்கையை,எனக்காக வாழவிடுங்கள் ப்ளீஸ்.
நான் யாருடனும்
என்னை ஒப்பிட்டு கொள்வது கிடையாது என்னையும் யாருடனும் ஒப்பிடாதீர்கள்.சமூக மதிப்பீடுகள்,அரசியல்,கலை,அறிவியல்,ஊடகம்,ஆன்மீகம்,பொழுதுபோக்கு
என்ற அனைத்து விசயங்களிலும் நான் மற்றவர்களிடமிருந்து மாறுபடுகிறேன்,மற்றவர்களும் என்னிடம்
இருந்து மாறுபடுகிறார்கள்.அதனால் தயவு செய்து……………………………….
நடந்த சில நல்ல
நிகழ்வுகள்
எனக்கு பிடித்த
இலக்கியம்,உலக சினிமா பற்றிய புரிதலுக்கு தீனி போடும் விதமாக ஒரு மாற்று ஊடக அமைப்பை
சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது.இயக்குனர் ராம்,இயக்குனர் லீனா மணிமேகலை,எழுத்தாளர்
அறந்தை மணியன்,இயக்குனர் & எழுத்தாளர் அம்ஷன் குமார் இன்னும் பலருடன் பேசுவதற்கு
வாய்ப்பு கிடைத்தது.கற்றுக் கொள்ள நிறைய இருக்கிறது இந்த உலகில் என்பதை மீண்டும் மீண்டும்
உணர்ந்து கொள்ளும் தருணம்.
11வது சென்னை திரைப்பட
விழாவை பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது.16 உலக திரைப் படங்களை பார்தேன்.அதில் ஆறு அற்புத
திரைப் படங்களும் அடங்கும்.
விழாவில் பதிவுலக
நண்பர் சுரேஷ் கண்ணன் அவருடன் அளவளாவினேன்.பல விசயங்களில் ஒரே சிந்தனை எனக்கும் அவருக்கும்.
நல்ல சந்திப்பு.
ஒரு சில உதவி இயக்குனர்களையும்
சந்தித்து பேசினேன்.இயக்குனர் பாலாஜி சக்திவேல் அவர்களுடன் சற்று நேரம் பேசினேன்.
மறக்க முடியாத
மரணம்:
தோழி இசைப் ப்ரியா,குமரன்
பாலச் சந்திரன்,தலைவர் நெல்சன் மண்டேலா,
வாசிப்பில்
ஜே ஜே சில குறிப்புகள்
உலகை உலுக்கிய
பத்து நாட்கள்
இந்த வருடத்தில்
தமிழில் நான் பார்த்த படங்களில் என்னை கவர்ந்தவை:
சூது கவ்வும்
ஆரண்ய காண்டம்
தங்க மீன்கள்
ஓநாயும் ஆட்டுக்குட்டியும்
பாதித்த நிகழ்வு
முள்ளிவாய்க்கால்
முற்றம் இடிப்பு,உத்தரகாண்ட் வெள்ளம்,
அனைவரை போல் நானும்
சுயநலவாதிதான் (சிலரை தவிர) என்றாலும் அவ்வப்போது நடக்கும் சில சமூக அவலங்கள் என்னை
பாதிக்கிறது; என்னால் எதுவும் செய்ய முடியாத கையாலகாததனத்தை வலையுலகம் மற்றும் முகநூல்
மூலமாக தீர்த்துகொள்ளும் ஒரு வடிகாலாக நான் இதைப் பார்க்கிறேன்.
என்ன செய்வது?
No comments:
Post a Comment