Tuesday, April 27, 2010

அந்த அரபிக் கடலோரம்

வளைகுடா வாழ் இந்தியர்களின் வாழ்க்கையைப் பற்றி பலரும் தங்கள் கருத்துக்களை வலைப் பதிவுகளில் பதிவு செய்திருந்தாலும் இது என்னுடைய பார்வையில் பதிவு செய்யும் சிறு முயற்சி.
வாழ்க்கையை வசதி ஆக்கிக் கொள்ளும் ஆசையில் விமானம் ஏறும் நம்மவர்களுக்கு காத்திருப்பது என்னவோ சொல்லவொண்ணா துயரங்கள்தான். உதாரணத்திற்கு கடும் வெயில், கடுங்குளிர், அதிகமான வேலைப்பளு மற்றும் குடும்பத்தினரை பிரிந்து வாழும் தனிமை, அதனால் ஏற்படும் மன உளைச்சல் இன்னும் சொல்லிக் கொண்டே போகலாம்.
வெளிநாடு சென்றாலோ அல்லது பெரு நகரங்களுக்கு இடம் பெயர்ந்தாலோ அதிக பணம் சம்பாதிக்கலாம் என்பது பல தடவை காலத்தால் பொய்யாக்கப்பட்ட ஒரு கூற்று. இதை நாம் வசதியாக மறந்து விட்டோம் என்பதே உண்மை. உடனே இங்கு வாழும் பலரும் இக்கருத்துக்கு எதிராக குரல் எழுப்புவது எனக்கு கேட்கிறது. பணம்தான் வாழ்க்கையின் அனைத்து சந்தோஷங்களுக்கும் ஆதாரம் என்றால் இங்கிருக்கும் அனைவரும் உண்மையாக சந்தோஷமாக வாழ்கிறீர்களா? இல்லையென்பதே விடை.
தமக்குப் பிறந்த குழந்தையின் முகத்தைக்கூட மூன்று அல்லது ஆறு மாதம் கழித்து பார்க்கும் கொடுமை, தாய் அல்லது தந்தையின் இறுதி சடங்கிற்குக்கூட சரியான தருணத்தில் போக முடியாத சூழல், அக்கா அல்லது தங்கையின் திருமணத்தைக்கூட வீடியோவில்தான் பார்க்கும் அவலம் இன்னும் முக்கியமான விசேஷங்கள், பண்டிகைகள், திருவிழாக்கள் அனைத்தையும் பார்க்க முடியாத நாம்தாம் சந்தோஷமாக வாழும் மனிதர்களா? இந்த மாதிரியான சந்தோஷங்களை இழந்துவிட்டு நாம் பணம் சம்பாதித்து என்ன பயன்? மனிதன் சம்பாதிப்பதே சந்தோஷமாக வாழ்வதற்க்குதானே?
சரி; அப்படியே இக்கொடுமைகளையெல்லாம் சகித்துக் கொண்டு நாம் சம்பாதித்த பணத்தில் நம் ஊரில் நம் வசதிக்கேற்ப ஒரு வீடு கட்டிக் கொள்ளலாம். அல்லது ஒரு காரையோ, கொஞ்சம் நகைகளையோ வாங்கலாம். அவ்வளவுதான். இப்பொருட்கள் அனைத்தும் நமக்கு இழந்த சந்தோஷங்களை திருப்பி கொடுத்து விட முடியுமா?
இதற்கெல்லாம் என்ன தீர்வு? நாம் அனைவரும் நம் தாயகம் திரும்பி விட்டால் இதற்கெல்லாம் தீர்வு கிடைக்குமா? ஆம் என்பதே அதிர்ச்சி அளிக்கும் பதில். நம் ஊரில் நம்மை எவன் மதிக்கிறான்? என்று நீங்கள் கேட்பது எனக்கு புரிகிறது. ஆனால் நாமும் அங்கே சம்பாதித்து சில காலம் வாழ்ந்துவிட்டுதான் இங்கே வந்தோம் என்பதை மறந்து விட கூடாது. நம் நாட்டில் இப்பொழுதும் 5,000 க்கும் குறைவாக வருமானம் ஈட்டி வாழ்பவர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள். அவர்களால் வாழ முடியும் என்றால் நம்மால் ஏன் முடியாது? வாழ முடியும். ஆனால் வசதியாக வாழ முடியாது என்கிற பணத்தாசை தான் காரணம். இதற்கு யாரும் விதி விலக்கல்ல.
இந்த பணத்தாசையின் மூல காரணத்திற்கான வேர்கள் நமது சமூக அமைப்பிலும், கலாச்சாரத்திலும் உள்ள அடிப்படை கோளாறுகளே ஆகும். உதாரணத்திற்கு வரதட்சணைக்காகவோ, திருமணச் செலவிற்காகவோ பணம் சேர்க்கும் காரணத்திற்காக இங்கே வருபவர்களும், சொந்த வீடுதான் சமூக அந்தஸ்து என்று கருதி வீடு கட்டுவதற்காக பெரும் பணம் சேர்க்க இங்கே வருபவர்களும் அதிகம்.
ஒரு காலத்தில் நம் ஊரில் படித்துவிட்டு அமெரிக்காவோ, இங்கிலாந்தோ செல்லும் கணினி அடிமைகளை பார்த்து அவர்கள் தாய் நாட்டை மறந்து விட்டார்கள் என்று போலி தேச பக்தி விமர்சனம் செய்த நாம் தான் இன்று நாட்டை மறந்து விட்டு இங்கே சுற்றித் திரிகிறோம் அடிமைகளாய். இந்தியாவின் அருமை, பெருமைகளை பறை சாற்றும் ஈமெயில்களை அனுப்புவதோ அல்லது இந்தியா வல்லரசாகும் என்று மீடியாக்கள் பிதற்றுவதை நம்பி பிற நாட்டினரை இகழ்வதுமே இங்கிருக்கும் நம்மில் பலரின் அன்றாட வேலையாகும். இதோடு நின்று விடாமல் நமக்குள்ளே பல பிரிவினைவாதம் தொடரத்தான் செய்கிறது. உதாரணத்திற்கு மலையாளி என்றாலே கெட்டவர்களாகவும், குஜராத்திகளை கருமிகளாகவும், கன்னடத்தினரை மொழி வெறியர்களாகவும், சர்தார்ஜிகளை முட்டாள்களாகவும் சித்தரிக்கும் போக்கும் உள்ள ஒற்றுமை உடைய நாம்தாம் நம் நாட்டை வல்லரசாக ஆக்கப் போகிறோமா?
”என்ன வளம் இல்லை இந்த திருநாட்டில்
ஏன் கையை ஏந்த வேண்டும் வெளிநாட்டில்”
என்ற பாடல் வரிகளுக்கேற்ப இனியாவது நாம் நம் நாட்டிலேயே சம்பாதிப்பதற்கான காரணிகளை உருவாக்கிக் கொள்ள வேண்டும்.

1 comment:

  1. U know. Thats y i am here only. i dont want to waste my time with other country. I want to spend my time with my country, city, family and friends.

    ReplyDelete