Monday, May 6, 2013

இந்திய சினிமா வயது 100


இந்திய சினிமா வயது 100.

என் நண்பனுக்கும் எனக்கும் நடை பெற்ற உரையாடல்.

"உனக்கு சினிமா தவிர வேற ஏதும் தெரியாதா?

"ஏன் என்றால், இந்த நூற்றாண்டின் மிக பிரமாண்டமான ராட்சச கலை, "சினிமாதான்".

இந்தியாவில் அந்த சினிமாவிற்கு வயது நூறு.

இந்த பொன்னான தருணத்தில் நமது தமிழ் சினிமாவின் சாதனை மற்றும் சோதனைகளை பார்ப்போம்.
முதலில் பேசா படமாக இருந்த சினிமா "காளிதாஸ் "(1931) படம் மூலம் பேசும் படமாக மாறியது.நாடகத்தில் இருந்து மாறியதால் தமிழ் சினிமா நாடகத்தன்மையுடன் விளங்கியது.பின்னர் 1954ல் வீணை பாலசந்தர் இயக்கத்தில் வெளி வந்த "அந்த நாள் " ஒரு சிறந்த திரை படத்திற்கான 
அனைத்து கூறுகளையும் கொண்டு இருந்தது.
பின்னர் இயக்குனர் திரு.ஸ்ரீதர் அவர்களின் வருகைக்கு பிறகு கொஞ்சம் சினிமாவின் நிறம் மாறத் தொடங்கியது.உதாரணத்திற்கு அவரின் "நெஞ்சில் ஓர் ஆலயம்" (1961) பின்னர் முழு நீள நகைச்சுவை படமான "காதலிக்க நேரமில்லை" (1964) கருதலாம்.ஆனால் சினிமா எப்பொழுதும் வர்த்தகர்களின் கையில் இருப்பதால் மறுபடியம் நாடகம்தான்.
100 திரைப்படங்களை எடுத்தேன் என்று தம்பட்டம் அடிக்கும் திரு.கே.பாலசந்தர் அவரும் அதே நாடகங்களை "வித்தியாசமாக" அரங்கேற்றினர்.
பின்னர் (1977) தமிழ் சினிமாவின் பொற்காலம் தொடங்கிய நேரம் திரு.பாரதிராஜா எனும் புயல் தமிழ்  சினிமாவை மையம் கொண்டது."16 வயதினிலே"இந்த படம் அனைத்து விதிகளையும் உடைத்தது.ஸ்டுடியோவில் இருந்த சினிமா சுதந்திரம் பெற்றது.நிஜ மனிதர்களை நமக்கு அறிமுகபடுத்தியது.அதே வருடம் வந்த திரு.ஜான் ஆபிரகாமின் "அக்ரகாரத்தில் 
கழுதை" மிக சிறந்த படம் ஆகும்.
பின்னர் திரு.ருத்ரையா இயக்கத்தில் வெளி வந்த "அவள் அப்படித்தான்" (1978)  என்ற படம் ஓர் "மாற்று சினிமா"என்று கூறலாம்.அதே வருடம் வெளி வந்த திரு.மகேந்திரனின் "முள்ளும் மலரும்" இலக்கியத்தை சினிமாவில் நுழைக்கும் புதிய யுக்தியை உண்டாக்கினார்.1979 ல் வந்த "உதிரிப் பூக்கள் " மற்றும் த.துரை இயக்கத்தில் வெளி வந்த "பசி" படங்கள் பெரிய தாக்கத்தை உண்டாக்கியது என்றே கூறலாம்.மறுபடியும் வணிக மசாலாவில் சிக்கிய சினிமாவை திரு.பாலு மகேந்திராவின் "வீடு " மற்றும் "சந்தியா ராகம்" மீட்டது.இதில் "வீடு"படம் NFDC ஒரு ஆவணமாக வைத்து உள்ளார்கள்.பின்னர் 1987ல் வெளியான "நாயகன்" மிக பெரிய அதிர்வலைகளை உண்டாக்கியது."டைம்ஸின்"மிக சிறந்த 100 படங்களில் இந்தியாவில் இருந்து தேர்ந்து எடுக்கப்பட்ட 3 திரை படங்களில் நாயகனும் ஒன்று.பின்னர் மறுபடியும் சுணக்கம் கண்டது நம் தமிழ் சினிமா,அப்பொழது (1999) வெளியான திரு.பாலாவின் "சேது"மறுபடியம் நம்பிக்கையை தந்தது.
பின்னர் வெளிவந்த "அழகி","ஆட்டோகிராப்" போன்ற சில முயற்சிகளை கூறலாம்.2003ல் வெளி வந்த திரு.கமலஹாசனின் "அன்பே சிவம்" ஒரு சிறந்த கம்யுனிச சித்தாந்ததை கொண்டு சிறப்பாக வடிவமைக்க பட்ட படமாகும்.2007ல் வெளி வந்த திரு.ராமின் "கற்றது தமிழ்" உலக மயமாக்கலின் பிரச்னை பற்றி பேசியது.பின்பு திரு.ராதா மோகனின் "மொழி",திரு.வசந்த பாலனின் "அங்காடி தெரு",திரு.அமீரின் "பருத்தி வீரன் ",திரு.வெங்கட் பிரபுவின் "சென்னை 600 028.",போன்ற நல்ல முயற்சிகளை பாராட்டலாம்.ஆனால்  யாரும் தொடர்ச்சியாக தரமான படங்களை தர முடிய வில்லை.2011ல் வெளி வந்த திரு.தியாகராஜ குமார ராஜாவின் "ஆரண்ய காண்டம்"விளிம்பு நிலை மனிதர்களின் வாழ்வியல் பற்றிய ஒரு சிறந்த உருவாக்கம் ஆகும்.2012ல் வெளி வந்த திரு.பாலாஜி சக்திவேலுவின் " வழக்கு எண் 18/9" ஒரு கீழ் தட்டு மக்களின் காதலையும்,அவர்களின் வலியையும் அழகாக பதிவு செய்தது.
ஆனால் தமிழ் சினிமாவின் புதிய அலை அண்மையில் வீச தொடங்கியுள்ளது.குறும் பட இயக்குனர்களின் வருகை அதிகரித்து உள்ளது,இதனால் பல இளையர்கள் தமிழ் சினிமாவின் இலக்கணத்தை தங்கள் படம் மூலம் உடைக்கத்தொடங்கி உள்ளனர்.உதாரணம் "அட்டகத்தி","பீட்சா","நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்","காதலில் சொதப்புவது எப்படி", "சூது கவ்வும்" இதன் மூலம் குறைந்த செலவில் புதிய முகங்களை வைத்து புதிய தொழில் நுட்பத்துடன் உலக சினிமாவின் தரத்தை எட்டி பிடிக்கும் முயற்சியில் இறங்கி உள்ளனர்.

பொது புத்தியில் 100 கோடி செலவில் எடுத்தால் அதுதான் "உலக சினிமா"என்று தவறாக நினைத்த கொண்டு உள்ளார்கள்.எந்த படம் நமது கலாச்சாரத்தையும்,நம் சமூகத்தையும்,நம் காதலையும்,நம் வீரத்தையும்,நம் வாழ்வியலையும் திரை மொழி வடிவத்தில் மிகை தன்மை இல்லாமல் சொல்லுகிறதோ அதுவே உலக சினிமாவாகும்.ஓர் ஆரோக்கிய சூழல் ஆரம்பித்து உள்ளதாக எனக்கு தோன்றுகிறது.நல்ல சினிமாவை எடுக்க துணியும் அனைவருக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றிகள்.







No comments:

Post a Comment