Thursday, December 26, 2013

2013 - திரும்பி பார்க்கிறேன்……

2013 - திரும்பி பார்க்கிறேன்……
எனக்கு நாள்,வாரம்,மாதம்,வருடம் போன்ற எந்த மனிதனின் கற்பிதங்களிலும் நம்பிக்கை இல்லை;” நாளை மற்றொரு நாள்” என்பதில்தான் எனக்கு நம்பிக்கை, இருந்தாலும் இந்த பதிவை எழுதுவதில் எந்த கூச்சமும் இல்லை என்பது நகைமுரண்.

ஒவ்வொரு வருடத்தின் முடிவிலும் அந்த வருடத்தின் முக்கிய நிகழ்வுகளை அசை போடுவதில் நமக்கொரு அலாதி சுகம்தான்.அப்படித்தான் இந்த பதிவும்.

33 வருட வாழ்க்கையில் மிக மோசமான நிகழ்வுகளை சந்தித்திருக்கிறேன்.சில நல்ல நிகழ்வுகளும் நடந்தன.
தீதும் நன்றும் பிறர் தர வாரா எனும் பழமொழியை தீர்க்கமாக நம்புபவன் நான்.அதனால் நடந்த எந்த நிகழ்வுகளுக்கும் நானே தார்மீக பொறுப்பேற்கிறேன்.

இந்த வருடத்தில் கற்ற பாடங்கள் இன்னும் எத்தனை பல்கலைகழகங்கள் சென்று கற்றாலும் கிடைக்காத அனுபவத்தை கொடுத்தன.
”இடுக்கண் வருங்கால் நகுக” என்னும் குறள் மிகப் பெரிய வன்முறையாகப் பட்டது, எனக்கு பலரும் அதை தவறாக புரிந்து கொண்டு என் துன்பத்தில் அவர்கள் சிரித்தனர்.பரவாயில்லை.

எனக்கு நண்பர்கள் யாரென்பதை புரியவைத்த ஆண்டு இது.ஒரு சில நல்ல உள்ளங்களைத் தவிர மற்றவர்கள் அனைவரின் சுயரூபத்தையும் புரிய வாய்ப்பு கிடைத்தது.ஆனாலும் நட்பின் இலக்கணம் மீது எனக்கு இன்னும் நம்பிக்கை இருக்கிறது.நட்பு என்பது பல வருட பழக்கம் என்பதை நாம் இன்னும் தப்பாகப் புரிந்து கொண்டிருக்கிறோம்.நல்ல நட்பிற்கு நாள்,கிழமை கிடையாது.இது என் புரிதல்.

வாழ்க்கை என்பதை வெற்றி,தோல்வி எனும் வியாபாரமாக பார்க்கும் பழக்கம் என்னிடமில்லை அதை ஒரு பயணமாக மட்டுமே பார்க்கிறேன்.அதனால் பொருளாதார ஏற்றத் தாழ்வுகள் என்னை பாதிப்பதை நான் அனுமதிப்பதில்லை.மாறாக இந்த சமூகத்தின் ஊற்றுக்கண் என்னை ஒரு வியாபாரியாக எடைபோடுகிறது.நான் சம்பாதிக்கும்போது என்னை பாராட்டுவதும்,சறுக்கும்போது என்னை எள்ளி நகையாடுவதையும் வழக்கமாக வைத்திருக்கிறது இது எனக்கு பெரிய அபத்தமாகப்படுகிறது.என்னை, என் வாழ்க்கையை,எனக்காக வாழவிடுங்கள் ப்ளீஸ்.

நான் யாருடனும் என்னை ஒப்பிட்டு கொள்வது கிடையாது என்னையும் யாருடனும் ஒப்பிடாதீர்கள்.சமூக மதிப்பீடுகள்,அரசியல்,கலை,அறிவியல்,ஊடகம்,ஆன்மீகம்,பொழுதுபோக்கு என்ற அனைத்து விசயங்களிலும் நான் மற்றவர்களிடமிருந்து மாறுபடுகிறேன்,மற்றவர்களும் என்னிடம் இருந்து மாறுபடுகிறார்கள்.அதனால் தயவு செய்து……………………………….

நடந்த சில நல்ல நிகழ்வுகள்
எனக்கு பிடித்த இலக்கியம்,உலக சினிமா பற்றிய புரிதலுக்கு தீனி போடும் விதமாக ஒரு மாற்று ஊடக அமைப்பை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது.இயக்குனர் ராம்,இயக்குனர் லீனா மணிமேகலை,எழுத்தாளர் அறந்தை மணியன்,இயக்குனர் & எழுத்தாளர் அம்ஷன் குமார் இன்னும் பலருடன் பேசுவதற்கு வாய்ப்பு கிடைத்தது.கற்றுக் கொள்ள நிறைய இருக்கிறது இந்த உலகில் என்பதை மீண்டும் மீண்டும் உணர்ந்து கொள்ளும் தருணம்.

11வது சென்னை திரைப்பட விழாவை பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது.16 உலக திரைப் படங்களை பார்தேன்.அதில் ஆறு அற்புத திரைப் படங்களும் அடங்கும்.

விழாவில் பதிவுலக நண்பர் சுரேஷ் கண்ணன் அவருடன் அளவளாவினேன்.பல விசயங்களில் ஒரே சிந்தனை எனக்கும் அவருக்கும். நல்ல சந்திப்பு.

ஒரு சில உதவி இயக்குனர்களையும் சந்தித்து பேசினேன்.இயக்குனர் பாலாஜி சக்திவேல் அவர்களுடன் சற்று நேரம் பேசினேன்.

மறக்க முடியாத மரணம்:
தோழி இசைப் ப்ரியா,குமரன் பாலச் சந்திரன்,தலைவர் நெல்சன் மண்டேலா,

வாசிப்பில்
ஜே ஜே சில குறிப்புகள்
உலகை உலுக்கிய பத்து நாட்கள்

இந்த வருடத்தில் தமிழில் நான் பார்த்த படங்களில் என்னை கவர்ந்தவை:
சூது கவ்வும்
ஆரண்ய காண்டம்
தங்க மீன்கள்
ஓநாயும் ஆட்டுக்குட்டியும்

பாதித்த நிகழ்வு
முள்ளிவாய்க்கால் முற்றம் இடிப்பு,உத்தரகாண்ட் வெள்ளம்,
அனைவரை போல் நானும் சுயநலவாதிதான் (சிலரை தவிர) என்றாலும் அவ்வப்போது நடக்கும் சில சமூக அவலங்கள் என்னை பாதிக்கிறது; என்னால் எதுவும் செய்ய முடியாத கையாலகாததனத்தை வலையுலகம் மற்றும் முகநூல் மூலமாக தீர்த்துகொள்ளும் ஒரு வடிகாலாக நான் இதைப் பார்க்கிறேன்.


என்ன செய்வது?

Tuesday, December 24, 2013

தலைமுறைகள்…..

தலைமுறைகள்…..
“ I don’t know Tamil “
“My second language is Hindi “
இப்படி எல்லாம் சொல்லிக்கொண்டு அலையும் நம்மைப் போன்ற கனவான்களும் நம் குழந்தைகளும் கண்டிப்பாக பார்க்க வேண்டிய படம் இது.

கடவுள்,சாதி,மதம்,மொழி எல்லாம் கற்பிதம் என்றாலும் தாய் மொழிதான் ஒருவனை அடையாளப்படுத்துகிறது.அந்த தாய் மொழி தெரியாத ஒரு பேரனுக்கும், தாய் மொழியைத் தவிர வேற எந்த மொழியையும் தெரியாத ஒரு தாத்தாவுக்கும் இடையேயான வாழ்வியலை பற்றி பேசுகிறது தலைமுறைகள்.

கொஞ்சம் அசந்தாலும் ஒரு பிரச்சாரப் படமாகவோ,ஒரு “கதை நேரமாகவோ” மாறிவிடக் கூடிய படத்தை மிக கவனமாக ஒரு திரைப் படமாக பதிவு செய்து இருக்கிறார் பாலு.

கூட்டுக் குடும்பங்கள் வழக்கொழிந்து கொண்டு இருக்கும் இக்காலத்தில் வீட்டில் முதியவர்கள் இல்லாமல் வாழ்ந்து கொண்டிருக்கும் நம் சமுதாயம் எத்தனை போலியானது என்று நமக்கு மறைமுகமாக உணர்த்தியிருக்கிறார் பாலு.

திரைக் கதை அத்தனை அழுத்தமில்லை,எடிட்டிங் சற்று உறுத்தலாகப் படுகிறது. பிண்ணணி இசை அவ்வளவு மோசமில்லை,ராஜாவால் “வீடு” படம் போன்ற ஒரு பிண்ணணி இசை வார்ப்பை கொடுக்க முடியாது என்று புரியவைத்து இருக்கிறார்.

பாலு நேரில் பேசுவது போலவே நடித்து இருக்கிறார்.மற்றவர்கள் இயல்பாக இருக்கிறார்கள்.ஒரு சிலர் நடிப்பில் அமெச்சூர்தனம் தெரிகிறது.


இந்த வருடத்தில் இரண்டு அல்லது மூன்று படங்கள் தான் தேறியிருக்கின்றன அதில் தலைமுறைகளை தைரியமாக சேர்க்கலாம்.






Friday, December 20, 2013

சமூக ஒழுக்கம்.....



நேற்று திரைப்பட விழா செல்ல குமணன்சாவடி சென்று பஸ்சில் ஏறினேன்.மாங்காடு டு ப்ரோட்வே பஸ்.கூட்டம் அதிகம் இருந்ததால் நின்று கொண்டு பயணித்தேன்.என் அருகில் இரண்டு இளைஞர்கள் அமர்ந்திருந்தனர்.இருவரும் ஏதோ பேசிக்கொண்டு வருகையில் அதில் ஒருவன் மட்டும் 'மாவா' எனும் லாகிரிவஸ்தை வாயில் மென்று அதன் எச்சிலை வெளியில் ரோட்டில் துப்பி கொண்டே பேசிகொண்டிருந்தான்.எனக்கு வந்த ஆத்திரத்துக்கு ... நல்ல வாயில வருது.இந்த மாதிரி சமுக ஒழுக்கம் இல்லாதவர்களை என்ன செய்யலாம்?.இதில் நெற்றியில் பழனி படிக்கட்டு மாதிரி திருநீறு,மஞ்சள்,குங்குமம்.கேட்டால் தன்னை பக்திமான் என்று கூறுவதற்கு.மத மற்றும் ஜாதி ஒழுக்கங்களில் நம்பிக்கையும், ஈடுபாடும் உள்ள நமக்கு சமூகம் சார்ந்த ஒழுக்கங்களில் ஏனோ மிகவும் அசிரத்தையாக இருக்கிறோம்.ரோட்டில் எச்சில் துப்புவது,தெருவில் சிறுநீர் கழிப்பது,பேருந்தில் பெண்களை உரசுவதில்,பொது இடங்களில் போனில் சத்தமாக பேசுவது,திரைஅரங்கில் தொண தொணவென பேசுவது,வகுப்புகளில் அடுத்தவர்களை பாடங்களை கவனிக்கவிடாமல் தொந்தரவு செய்வது என அடுக்கி கொண்டே போகலாம்.எத்தனை கோவில்கள்,மசூதிகள்,தேவாலயங்கள் சென்றாலும் மத போதனைகள் தவிர்த்து சமூக ஒழுக்கம் பற்றியும் தனி மனித சுதந்திரம் பற்றியும் சொல்லித்தருகிறார்கள் என்கிற கேள்வி எழுகிறது.அதையெல்லாம் பள்ளிகளும்,கல்லூரிகளும் சொல்லி தரும் என்று அவர்கள் மேல் பழியை போட்டு விடுவார்கள்.சரி, பாமரர்களுக்கு யார் சொல்லி தருவது.?

சிந்திப்போம்.....

உதவி இயக்குனர்களும், இயக்குனர்களும்...!

உதவி இயக்குனர்களும், இயக்குனர்களும்...!

நடந்து கொண்டிருக்கும் சென்னை பட விழாவில் நிறைய நாளைய இயக்குனர்களை சந்திக்க நேர்ந்தது.அதன் விளைவாக என் கேள்விகளும்,விளக்கங்களும்.

இன்று எத்தனையோ இயக்குனர்கள் நேற்று யாரிடமோ உதவி இயக்குனர்களாக பணி புரிந்தவர்கள்தான், ஆனால் இன்று சற்று உயர்ந்தவுடன் பிற சக இயக்குனர்களை பற்றி எந்த அக்கறை இல்லாமல் எப்படி இருக்க முடிகிறது?

நிரந்தர பணியின்மை,முறையான சம்பளயின்மை,அறிவு சார்ந்த திருட்டு,மனித தன்மையற்ற முறையில் நடத்தும் விதம் என எத்தனையோ கொடுமைகளுக்கு நடுவில் அவர்கள் வாழ வேண்டி இருக்கிறது.

குறைந்தபட்சம் 100 உதவி இயக்குனர்கள் தங்க ஒரு விடுதி,3 வேளை சாப்பிட மெஸ்,ஒரு சிறிய நூலகம், ஒரு 100 உலக சினிமாக்கள் குறுந்தகடுகளுடன் கூடிய ஒரு சிறிய ஹோம் தியேட்டர் என ஒரு விடுதி கட்டி கொடுத்தால் இவர்களின் அவல நிலை மாறலாம்.

ஊழலை ஒழிப்பேன்,இந்தியாவை காப்பாற்றுவேன்,சமுக அவலங்களை தோல் உரிப்பேன் என்றெலாம் உதார்விட்டு படம் எடுக்கும் இளம் மற்றும் முது இயக்குனர்கள் இதை பற்றி கொஞ்சம் வாய் திறப்பார்களா?

பார்க்கலாம்...........

11வது சென்னை சர்வதேச திரைப்பட விழா – அபத்தங்களும்,ஆறுதல்களும்


பல பிரச்சனைகளும்,அரசியல் குறுக்கீடுகளும் இடையே நடைபெற்ற இந்த விழாவில் பல அபத்தங்களையும் சில ஆறுதல்களையும் காண முடிந்தது.
சுஹாசினி பேசுகையில் யாரும் பொருளுதவி செய்யவில்லை என்று புலம்பி தள்ளினார்,மற்ற மாநிலங்களில் எல்லாம் அரசின் உதவியில் நடந்த விழா நம்மூரில் அனாதையாக நடந்தேறியது.

ஹிந்து நாளிதழ் 20 லட்சம்,சரத் குமார் 8 லட்சம்,மணிரத்னம் 7 லட்சம் என பலரும் உதவியுள்ளனர்.ஆனால் நடிகர் சங்கம்,திரைப்பட தயாரிப்பாளர் சங்கம்,இயக்குனர் சங்கம் இன்னும் பிற சங்கத்தினர் எந்த உதவியும் செய்யாதது ஏனோ தெரியவில்லை?
இன்னும் நம்மூரில் ஒரு திரைப்படத்தை எப்படி பார்ப்பது என்றே  தெரியவில்லை.படம் பார்க்கும் போது அலைபேசியை உபயோகிப்பது,குறட்டை விட்டு தூங்குவது,படம் ஆரம்பித்து பாதி காட்சியில் வருவது,இடையில் விசில் அடிப்பது என எல்லா வகை தொந்தரவுகளையும் தருவது மிகுந்த சலிப்பை தந்தது.
அப்புறம் நகரின் மையத்தில் மட்டும் நடந்த இந்த விழா சென்னையின் புற நகரையொட்டியும் நடக்க வேண்டும்.உதாரணத்திற்கு தாம்பரம்,ஆவடி,வட சென்னை,பூந்தமல்லி,திருவான்மியூர் போன்ற இடங்களிலும் நடந்திருந்தால் பலரும் பயனடைந்திருப்பார்கள்.
பலருக்கு இப்படியொரு நிகழ்வு நடப்பது தெரியெவேயில்லை.இன்னும் விளம்பரப்படுத்தியிருக்கலாம்.
தமிழ் படங்களின் தரத்தை பற்றிய சர்ச்சையும் ஒய்ந்தபாடில்லை.”ஓநாயும் ஆட்டுக்குட்டியும்” படம் திரையிடப்படாதது குறித்த கேள்விக்கு மிஷ்கின் படத்தை தர முன்வரவில்லை என்றனர்.ஆனால் ”மூன்று பேர் மூன்று காதல்”, “மூடர் கூடம்”, ”ஆறு மெழுகுவர்த்திகள்”,”கும்கி” எல்லாம் எந்த தைரியத்தில் திரையிடுகிறார்கள்?பாதி படங்கள் காப்பி,மீதிய படங்கள் அரசியல் குறுக்கீடுகள்.
நான் பார்த்த 16 திரைப்படங்களில் 6 திரைப்படங்கள் அப்படியொரு அற்புதம்.அவைகள் The Circle within,Roa,Harmony Lessons,Parviz,Tangerines, இவை அனைத்தையும் தயவு செய்து காண தவறாதீர்கள்.Ship of Theseus ஏற்கனவே திரையரங்கில் பார்த்து விட்டதால் அதையும் சேர்த்து கொள்ளலாம் நல்ல படம்.
நான் தவற விட்ட படங்கள் Tha Omar,Hush Girls Don’t scream,Blue is the warmest colour,The past,Like father Like son,Mother I love you முதலியவைகளாகும்.இவை அனைத்தையும் இணையத்தில் பார்த்து விட வேண்டும்
சில இயக்குனர்களையும், உதவி இயக்குனர்களையும் சந்தித்து பேசினேன்.அவர்களின் பேச்சின் மூலம் தெரிந்து கொண்டவைகளைப் பற்றி பிரிதொரு சந்தர்ப்பத்தில் எழுதுகிறேன்.
சில புதிய நண்பர்களையும்,நல்ல அனுபவங்களையும் பெற்ற மகிழ்ச்சியுடன் விடை பெறுகிறேன்.

நன்றி.மீண்டும் சந்திப்போம்.