Tuesday, April 27, 2010

அந்த அரபிக் கடலோரம்

வளைகுடா வாழ் இந்தியர்களின் வாழ்க்கையைப் பற்றி பலரும் தங்கள் கருத்துக்களை வலைப் பதிவுகளில் பதிவு செய்திருந்தாலும் இது என்னுடைய பார்வையில் பதிவு செய்யும் சிறு முயற்சி.
வாழ்க்கையை வசதி ஆக்கிக் கொள்ளும் ஆசையில் விமானம் ஏறும் நம்மவர்களுக்கு காத்திருப்பது என்னவோ சொல்லவொண்ணா துயரங்கள்தான். உதாரணத்திற்கு கடும் வெயில், கடுங்குளிர், அதிகமான வேலைப்பளு மற்றும் குடும்பத்தினரை பிரிந்து வாழும் தனிமை, அதனால் ஏற்படும் மன உளைச்சல் இன்னும் சொல்லிக் கொண்டே போகலாம்.
வெளிநாடு சென்றாலோ அல்லது பெரு நகரங்களுக்கு இடம் பெயர்ந்தாலோ அதிக பணம் சம்பாதிக்கலாம் என்பது பல தடவை காலத்தால் பொய்யாக்கப்பட்ட ஒரு கூற்று. இதை நாம் வசதியாக மறந்து விட்டோம் என்பதே உண்மை. உடனே இங்கு வாழும் பலரும் இக்கருத்துக்கு எதிராக குரல் எழுப்புவது எனக்கு கேட்கிறது. பணம்தான் வாழ்க்கையின் அனைத்து சந்தோஷங்களுக்கும் ஆதாரம் என்றால் இங்கிருக்கும் அனைவரும் உண்மையாக சந்தோஷமாக வாழ்கிறீர்களா? இல்லையென்பதே விடை.
தமக்குப் பிறந்த குழந்தையின் முகத்தைக்கூட மூன்று அல்லது ஆறு மாதம் கழித்து பார்க்கும் கொடுமை, தாய் அல்லது தந்தையின் இறுதி சடங்கிற்குக்கூட சரியான தருணத்தில் போக முடியாத சூழல், அக்கா அல்லது தங்கையின் திருமணத்தைக்கூட வீடியோவில்தான் பார்க்கும் அவலம் இன்னும் முக்கியமான விசேஷங்கள், பண்டிகைகள், திருவிழாக்கள் அனைத்தையும் பார்க்க முடியாத நாம்தாம் சந்தோஷமாக வாழும் மனிதர்களா? இந்த மாதிரியான சந்தோஷங்களை இழந்துவிட்டு நாம் பணம் சம்பாதித்து என்ன பயன்? மனிதன் சம்பாதிப்பதே சந்தோஷமாக வாழ்வதற்க்குதானே?
சரி; அப்படியே இக்கொடுமைகளையெல்லாம் சகித்துக் கொண்டு நாம் சம்பாதித்த பணத்தில் நம் ஊரில் நம் வசதிக்கேற்ப ஒரு வீடு கட்டிக் கொள்ளலாம். அல்லது ஒரு காரையோ, கொஞ்சம் நகைகளையோ வாங்கலாம். அவ்வளவுதான். இப்பொருட்கள் அனைத்தும் நமக்கு இழந்த சந்தோஷங்களை திருப்பி கொடுத்து விட முடியுமா?
இதற்கெல்லாம் என்ன தீர்வு? நாம் அனைவரும் நம் தாயகம் திரும்பி விட்டால் இதற்கெல்லாம் தீர்வு கிடைக்குமா? ஆம் என்பதே அதிர்ச்சி அளிக்கும் பதில். நம் ஊரில் நம்மை எவன் மதிக்கிறான்? என்று நீங்கள் கேட்பது எனக்கு புரிகிறது. ஆனால் நாமும் அங்கே சம்பாதித்து சில காலம் வாழ்ந்துவிட்டுதான் இங்கே வந்தோம் என்பதை மறந்து விட கூடாது. நம் நாட்டில் இப்பொழுதும் 5,000 க்கும் குறைவாக வருமானம் ஈட்டி வாழ்பவர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள். அவர்களால் வாழ முடியும் என்றால் நம்மால் ஏன் முடியாது? வாழ முடியும். ஆனால் வசதியாக வாழ முடியாது என்கிற பணத்தாசை தான் காரணம். இதற்கு யாரும் விதி விலக்கல்ல.
இந்த பணத்தாசையின் மூல காரணத்திற்கான வேர்கள் நமது சமூக அமைப்பிலும், கலாச்சாரத்திலும் உள்ள அடிப்படை கோளாறுகளே ஆகும். உதாரணத்திற்கு வரதட்சணைக்காகவோ, திருமணச் செலவிற்காகவோ பணம் சேர்க்கும் காரணத்திற்காக இங்கே வருபவர்களும், சொந்த வீடுதான் சமூக அந்தஸ்து என்று கருதி வீடு கட்டுவதற்காக பெரும் பணம் சேர்க்க இங்கே வருபவர்களும் அதிகம்.
ஒரு காலத்தில் நம் ஊரில் படித்துவிட்டு அமெரிக்காவோ, இங்கிலாந்தோ செல்லும் கணினி அடிமைகளை பார்த்து அவர்கள் தாய் நாட்டை மறந்து விட்டார்கள் என்று போலி தேச பக்தி விமர்சனம் செய்த நாம் தான் இன்று நாட்டை மறந்து விட்டு இங்கே சுற்றித் திரிகிறோம் அடிமைகளாய். இந்தியாவின் அருமை, பெருமைகளை பறை சாற்றும் ஈமெயில்களை அனுப்புவதோ அல்லது இந்தியா வல்லரசாகும் என்று மீடியாக்கள் பிதற்றுவதை நம்பி பிற நாட்டினரை இகழ்வதுமே இங்கிருக்கும் நம்மில் பலரின் அன்றாட வேலையாகும். இதோடு நின்று விடாமல் நமக்குள்ளே பல பிரிவினைவாதம் தொடரத்தான் செய்கிறது. உதாரணத்திற்கு மலையாளி என்றாலே கெட்டவர்களாகவும், குஜராத்திகளை கருமிகளாகவும், கன்னடத்தினரை மொழி வெறியர்களாகவும், சர்தார்ஜிகளை முட்டாள்களாகவும் சித்தரிக்கும் போக்கும் உள்ள ஒற்றுமை உடைய நாம்தாம் நம் நாட்டை வல்லரசாக ஆக்கப் போகிறோமா?
”என்ன வளம் இல்லை இந்த திருநாட்டில்
ஏன் கையை ஏந்த வேண்டும் வெளிநாட்டில்”
என்ற பாடல் வரிகளுக்கேற்ப இனியாவது நாம் நம் நாட்டிலேயே சம்பாதிப்பதற்கான காரணிகளை உருவாக்கிக் கொள்ள வேண்டும்.

Tuesday, April 6, 2010

தமிழ் சினிமாவும், வன்முறையும்

நான் அண்மையில் பார்த்த திரைப்படம் “ரேனிகுண்டா” . இத்திரைப்படத்தின் திரைக்கதை சுவாரசியமாக இருந்த போதிலும் இளைஞர்களின் மனதில் வன்முறையை மட்டுமே தூண்டும் விதமாக அமைந்துள்ளது. இதுமட்டுமல்ல நான் கடந்த சில வருடங்களாக பார்க்கும் திரைப்படங்களில் வன்முறையை மட்டுமே மையக் கருத்தாக கொண்டு திரைக்கதை அமைக்கப்படுகிறது. சினிமாவில் அரிவாள் கலாச்சாரமும், துப்பாக்கி கலாச்சாரமும் மட்டுமே தலையோங்கி காணப்படுகிறது. இது பார்வையாளர்களின் மனதில் வன்முறையையும், காழ்ப்புணர்ச்சியையும் மட்டுமே தூண்டும் விதமாக அமைகிறது. உதாரணத்திற்கு பருத்தி வீரன், சுப்ரமணியபுரம், பீமா, புதுப்பேட்டை போன்ற பிரபலமடைந்த திரைப்படங்களும் இதே பாணியில் எடுக்கப்பட்ட படங்கள்தான். இந்நிலையில் கார்ப்பரேட் நிறுவனங்களின் கையில் மாறி வரும் தமிழ் சினிமா வணிகத் தன்மை என்ற பெயரில் குத்துப் பாட்டு, அரிவாள், ஆபாசம் இந்த மூன்றை மட்டுமே பிரதானமாக நமக்கு போதித்து வருகிறது. இதற்கு யாருமே விதி விலக்கல்ல. உலக நாயகன் என்று கூறிக்கொள்ளும் கமல ஹாசனும் தசாவதாரம் படத்தில் ஒரு காட்சியில் வன்முறையின் உச்சத்துக்கே சென்றுள்ளார். மற்றும் அண்மையில் வெளிவந்த அவருடைய திரைப்படமான “உன்னைப் போல் ஒருவனிலும்” காட்சியில் வன்முறை இல்லாவிடினும் வார்த்தை வன்முறையை கையாண்டிருக்கிறார். அவர் தன் மனைவியுடன் தொலைபேசியில் பேசும்பொழுது அவருடைய மனைவி “இன்ஷா அல்லாஹ்வா” என்று கேட்கும்பொழுது இஸ்லாமிய சமூகத்தினரை தூண்டும் விதமாக உள்ளது. இப்படம் முழுவதும் இந்துத்துவம் மறைமுகமாக ஒளிந்து உள்ளது. இது அரிவாள் கலாச்சாரத்தை விட கேவலமாக உள்ளது. இதே நிலைதான் பாலாவின் இயக்கத்தில் வெளிவந்த “நான் கடவுள்” படத்தின் கருத்தும். வன்முறை இல்லாமல் எடுக்கும் திரைப்படம் வெற்றி பெற முடியாது என்கிற மாயையை சினிமா வர்த்தகர்கள் மற்றும் இயக்குனர்கள் மக்கள் மத்தியில் ஏற்படுத்தி உள்ளனர். இது மாதிரியான திரைப்படங்களைப் பார்த்து சிலர் வன்முறையில் இறங்குவது சமூகத்திற்கு பெரும் அச்சுறுத்தலாக அமைந்துள்ளது. இந்தி சினிமாவில் இந்த அவல நிலை தற்போது இல்லை. அங்கு காதலையும், நகைச்சுவையையும் மற்றும் நல்ல கருத்துக்களையும் கொண்ட திரைப்படங்களையுமே மக்கள் வெற்றி அடையச் செய்கின்றனர். ஆனால் தமிழில் பூ, மொழி, பசங்க, அங்காடித் தெரு, எவனோ ஒருவன் போன்ற எப்போதோ அத்தி பூத்தாற்போன்ற நல்ல திரைப்படங்கள் வருகின்றன. ஆனால் சில சமயம் வணிக வெற்றி அடைய முடியாததால் இப்படங்கள் தோல்வியையே தழுவுகின்றன. இதே நிலை தொடர்ந்தால் அடுத்த தலைமுறையினரிடம் வன்முறையும், பகைமை உணர்ச்சியும் மட்டுமே மேலோங்கி இருக்கும். முண்ணனி கதாநாயகர்களின் (அஜித்,விஜய்,சிம்பு,தனுஷ்) மிக மோசமான வணிகத் திரைப்படங்களை முதல் நாள் முண்டி அடித்துக் கொண்டும், அதே நாளில் திருட்டு விசிடியில் பார்க்கும் நம்மில் பலர் நான் மேலே குறிப்பிட்ட படங்களை திரையரங்குகளில் சென்று கூட பார்க்கும் பொறுமை அற்றவர்களாக உள்ளனர். ஹாரிபாட்டர், ஸ்பைடர்மேன், போன்ற காதில் பூ சுற்றும் வகையான படங்களை பார்த்துவிட்டு தன்னை கிளாஸ் ஆடியன்ஸ் என்று கூறிக்கொள்ளும் இவர்கள் தமிழில் எந்த நல்ல திரைப்படங்கள் வந்தாலும் அதை தரக்குறைவாக விமர்சனம் செய்யும் அறிவுஜீவிகளாக இருக்கின்றனர். மேலும் சிவாஜி, பில்லா, தசாவதாரம் போன்ற மிக மோசமான வணிகத் திரைப்படங்கள் வெற்றி பெற்றதாக நம்மை நம்ப வைக்க விளம்பர உத்தியை கையாளுகின்றனர். மிகக் குறைந்த செலவில் எடுக்கப்பட்ட நாடோடிகள், பசங்க போன்ற திரைப்படங்களும் வணிக வெற்றியை பெறத்தான் செய்கின்றன. பின்பு ஏன் இவர்கள் இது போன்ற உப்புமா படங்களை எடுத்து நம்மை இளிச்சவாயர்களாக்கிக் கொண்டிருக்கின்றனர். இந்த நிலை மாற நாம் மிக முக்கியமாக செய்ய வேண்டியவை: தயவு செய்து எந்த திரைப்படத்தையும் திருட்டு விசிடியில் பார்ப்பதை தவிர்க்க வேண்டும். யாரோ ஒருவரின் உழைப்பை சில கயவர்கள் தங்களின் சுய நலத்திற்க்காக பயன்படுத்துவதை நாம் ஒரு போதும் அனுமதிக்கக்கூடாது. அதே போன்று நான் மேலே குறிப்பிட்ட நல்ல திரைப்படங்கள் வெளி வரும்போது அதை தியேட்டரில் சென்று காணுவதோடு மட்டுமல்லாமல் நம்மை சுற்றி உள்ளவர்களையும் தியேட்டரில் சென்று காணுமாறு வலியுறுத்த வேண்டும். இவ்வாறாக நாம் தொடர்ந்து செய்தால் தமிழ் சினிமாவின் தற்போதைய அவல நிலை மாறும். அந்த நிலை மாறினால் தமிழிலும் ஒரு சத்யஜித்ரே, அக்கிரோ குரோசோவா உருவாவதற்கு வாய்ப்புகள் வரலாம். இல்லையெனில் தரணி, பேரரசு, ஷங்கர் போன்ற தரங்கெட்ட இயக்குனர்களோடுதான் நாம் காலந்தள்ள வேண்டிய நிலைமை உண்டாகும்.
இனி தீபாவளி, பொங்கல் பண்டிகைகளில் படம் பார்த்தால் மட்டுமே உயிர் வாழ முடியும் என்று நினைப்பவர்களும், தொலைக்காட்சியை கட்டிகொண்டு அழுபவர்களும் நல்ல திரைப்படங்கள் வெளிவரும் தினத்தன்று திரையரங்குகளில் சென்று காணுமாறு கேட்டுக் கொள்கிறேன்.