( சிறுகதை முயற்சி)
தலைப்பு : ‘சீதக்காதி’
’அகல்யா’ கண்முழித்த போது அப்பாவை காணவில்லை,’டீ’ குடிக்க போயிருப்பார் என்று நினைத்து கொண்டு, குளிக்க சென்றுவிட்டாள். ஒரு மணி நேரத்திற்கு மேலாகியும் அப்பாவின் அரவமில்லை என்றவுடன், ’தினேஷ்’க்கு போன் செய்தாள்.
‘டேய், அப்பாவை காணோம்,உனக்கு எதுவும் போன் செய்தாரா?’’
‘’இல்லைக்கா, நான் இப்போ வீட்டுக்குத்தான் வந்து கொண்டிருக்கிறேன்,வந்து பேசலாம்’”
’’எங்கதான் போச்சோ தெரியலை,சரி சீக்கிரம் வா’”
போனை வைத்துவிட்டு காலை வீட்டு வேலைகளில் மும்முரம் ஆகிவிட்டாள். ஆனால் வேலையில் கவனம் வரவில்லை, ’”நேத்து சத்தம் போட்டதில,எங்கனாச்சும் கோயிச்சுகிட்டு போயிடுச்சோ” என மனசுக்குள்ளே ஒரு கவலை சூழ்ந்துவிட்டது.
அந்த உரையாடல் மறுபடி உள்ளுக்குள் ஒடியது.
’”நீ என்னைக்காவது எனக்கும்,தம்பிக்கும் என்னை செஞ்சி கிழிச்சிருக்கோ?”,அம்மா செத்ததுக்கும் உன்னோட இந்த வீணாய்போன பிடிவாதம்தான் காரணம்’”
’இல்லைம்மா,அது வந்து……..’’
‘தயவு செய்து நிப்பாட்டு, உனக்கு எப்போ பார்த்தாலும் பிசினஸ் பண்ணனும்,அதுக்கு பூரா துட்டை அழிக்கனும்,அப்புறம் கடனாளி ஆகிட்டு பொளம்பறது’”
‘இல்லை, நீங்க நல்லா இருக்கனும்னுதான்…..’”
’”போதும்பா, நீ செஞ்ச நல்லது எல்லாம். நீ செத்தாதான் நாங்க நல்ல நிலைமைக்கு வருவோம் போல இருக்கு, என்னடா கல்யாணம் வயசுல் பொண்ணு இருக்கு,ச்சே! உன் கூட பேசுறதுக்கு சொவத்துல போயி முட்டிக்கலாம்,பேசாம போயிடு காத்தால ’டென்ஷன்’ பண்ணாத!’’
’”அய்யோ, ரொம்பதான் திட்டிட்டோமா’” என்ற நினைவு மூளையை பிசைய ஆரம்பித்துவிட்டது.
கீழே ’கார்’ சத்தம் கேட்டது,’தினேஷ்’ வந்துவிட்டான்.
‘” அக்கா’”
‘’ வாடா, என்ன ஆச்சு,எங்க அந்த மனுசன்’’
‘’ இல்லைக்கா, ’போன்’ எதுவும் பண்ணலையே,விடு,எங்கயாவது போயிட்டு வந்துரும்,’சுந்தரம்’ மாமாவை கேட்டியா?”
‘’இல்லைடா’’
தினேசுக்கு அப்பாவின் மேல் அத்தனை அக்கறை எல்லாம் கிடையாது தன்னோட இந்த ’கால் டாக்ஸி’ வாழ்க்கைக்கு அப்பாதான் காரணம் என்று நினைப்பவன்.
’அகல்யா’ வேற்று உடைக்கு மாறிவிட்டு சுந்தரம் மாமாவின் வீட்டை நோக்கி கிளம்பினாள்.
போகும் வழியில் இருக்கும் ‘பார்க் பென்ஞ்சில்’ இருக்கிறார்களா என பார்க்க வேண்டும் என்று நினைத்து கொண்டே வெளியேறினாள்.
நினைத்தது போலவே அங்கே ’சுந்தரம்’ மாமா தனியாக அமர்ந்து எங்கோ வெறித்த பார்வையுடன் இருந்தார்.
’‘மாமா’’
அவளின் குரல் கேட்டு திடுக்கிட்டு திரும்பினார்,அவர் கையில் ஒரு கவர்.
பித்துபிடித்தவர் போல இருந்தவரை பார்த்தவுடன் அகல்யாவிற்கு வயிற்றில் புளியை கரைக்க ஆரம்பித்தது.
‘’ அப்பாவை காணோம்’’ என்றாள்.
எந்த சலனமும் இல்லாமல் அந்த ’கவரை’ அவளிடம் நீட்டினார்.சற்றே பயத்துடன் அதை பிரித்து படிக்க ஆரம்பித்தாள்.
’அகல்யா’ & ’தினேஷ்’,
’”என்னை மன்னிக்கவும் முதலில்.உங்கள் வாழ்க்கை துயரத்திற்கு நான் தான் என்று உங்கள் பார்வைக்கு என்னால் கடைசி வரை பதிலளிக்கவே முடியவில்லை. எல்லோரும் போல வாழாமல், எனக்கு பிடித்த மாதிரியான வாழ்க்கை வாழ நினைத்து கடைசியில் தோற்றுப்போன பின்பு இந்த சராசரி வாழ்க்கையையும் வாழ முடியாமல் போனதுதான் என் தோல்வியின் துவக்கம்.விடுங்கள்,திரும்பவும் விளக்கங்களுக்கு உள்ளே செல்ல நேரமில்லை.ஆனால் நீங்கள் ஆசைப்பட்ட வாழ்க்கையை, வாழ அனைத்து முயற்சிகளையும் எடுத்து விட்டேன், நான் இல்லாமல் போனால்தான் அந்த வாழ்க்கை உங்களுக்கு கிடைக்கும் என்பதுதான் உங்களுக்கு விருப்பம் என்றால்,அதை நிறைவேற்றுவதே அப்பாவாகிய என் கடமை. இது கோபத்திலோ,என் மீது இருக்கும் அவதூறுகளை தொடைக்கவோ நான் எடுக்கவில்லை. நீங்க ரெண்டும் நல்லா இருக்கனும்,உங்களுக்கு பிடிச்ச மாதிரியான வாழ்க்கையை வாழுங்கள்.
’தினேஷ்’ – உனக்கு பிடிச்ச மாதிரியான் ’கார்’ கம்பெனி வைத்து பிழைத்து கொள்.
அகல்யா – உனக்கு பிடித்த எதாவது ’ மெடிக்கல் லேப்’ வைத்து முன்னேறு.ஒரே குறைதான் உனக்கு கல்யாணம் செய்து வைக்கும் பாக்கியம்தான் இல்லாமல் போய்விட்டது.
அப்புறம்,உங்கள் அம்மா உயிரோடு இருந்த வரைக்கும் என் எல்லா முயற்சிக்கும் ஆதரவாகத்தான் இருந்தாள்.அவள் மரணத்திற்கு நான் காரணமில்லை,ஆனால் நானும் காரணம்தான்.புண்ணியவதி.
சரி,விடை பெறுகிறேன்,சுந்தரம் மாமாவை அவ்வப்போது கவனித்து கொள் முடிந்தால். நல்ல மனுசன்.அப்புறம் இந்த கடிதத்தை கிழித்துவிடு.இன்னும் ஒரிரு நாட்களுக்குள் இதில் இருக்கும் அட்ரஸூக்கு என் மரண சான்றிதழையும், நம் வீட்டுக்குள் இருக்கும் என் சூட்கேஸில் இருக்கும் கவரையும் சேர்த்துவிடு.
இப்படிக்கு,
அப்பா.
அதை படித்து முடித்தவுடன் ’அகல்யா’ கண்கள் குளமாகிவிட்ட்து,கிட்டத்தட்ட கை,கால் எல்லாம் நடுங்க தொடங்கிவிட்டது.
’’மாமா” என்று ஒவேன அழது புரள ஆரம்பித்துவிட்டாள்.
’சுந்தரம்’ எந்த பதிலும் இல்லாமல் கண்கள் பனித்த நிலையில் அவள் தலையை கோதியபடியே இருந்தார்.
மறுநாள், தகவல் தெரிந்தவுடன்,அரசு மருத்துவமனையின் பிணவறையின்
முன்னே அகல்யா,தினேஷ்,சுந்தரம் மூவரும் இன்னும் சில உறவினர்களும் நின்று கொண்டிருந்தனர்.
’ஃபார்மால்ட்டி’ எல்லாம் முடிந்து ’பாடி’ ஆம்புலன்ஸில் ஏற்றப்பட்டது.
’காரியம்’ எல்லாம் முடிந்த ஓரு வாரம் கழித்து சுந்தரம் வீட்டிற்கு வந்தார்.
’’அகல்யா’’
’’மாமா’’ மிகுந்த சோக முகத்துடன் ’அகல்யா’ அரையில் இருந்து கூடத்திற்குள் வந்தாள்.
’ இந்தாம்மா, இதை கொண்டு போய், நாளைக்கு அந்த ’கம்பெனி’யில் ’விக்னேஷ்’ என்று ஒருத்தர் இருப்பார்,அவரிடம் கொண்டு போய் குடு’” என்று ஒரு கவரை நீட்டினார்.
எந்த சுரத்தும் இல்லாமல் அதை வாங்கி கொண்டாள்.
மறுநாள்.
‘’மிஸ்டர்.விக்னேஷ்’’
‘’யெஸ்’’
‘’நான் அகல்யா,கர்ணன் அவரோட ’டாட்டர்’’”
’’ப்ளீஸ்,உட்காருங்க’”.
’” உங்க அப்பாவோட ”கிளைம்’ எல்லாம் ’ரெடி’. அடுத்த வாரம் வாங்க. ’செக்’ ரெடியாகிடும், உங்களைத்தான் ’கார்டியானா’ போட்டிருக்கார்,அதனால,’ஐ.டி. புரூஃப்’,’அட்ரஸ் புரூஃப்’ எல்லாம் எடுத்துகிட்டு வந்துடுங்க,இந்தாங்க என்னோட ’கார்டு’ என நீட்டினான்.
ஒரு வாரம்.அதே அலுவலகம்.
தினேசும், அகல்யாவும் ரிசப்ஷனில் காத்திருந்தனர்.
கையில் ’செக்’குடன் வந்தான் ’விக்னேஷ்’.
‘ஆக்சிடெண்ட் கிளைமும் சேர்ந்து இருப்பதால் கூடுதலாக 25 லட்சம் கிடைச்சு இருக்கு,’டாக்குமெண்ட்’ எல்லாம் ’பக்காவா’ இருப்பதால் எந்த பிரச்சினையும் இல்லை.
’செக்கை’ நீட்டினாள்.
‘’75 லட்சம்’’
‘அங்கயே கதற ஆரம்பித்து விட்டாள் ’அகல்யா’,அதை பார்த்த ’தினேஷ்’ம் கலங்கிவிட்டான்.இருவரும் கதறி அழுதது, அந்த இடத்தின் அமைதியை குலைத்துவிட்டது.
வீட்டிற்கு வரும் வழியில் சுந்தரத்தை பார்த்துவிட்டு வந்தார்கள்.சுந்தரம் கூறியது அவர்களை அப்படியே உருக்கலைத்து விட்டது.
‘உங்க அப்பன்,’50’லட்சம் ’டெர்ம்’ ’இன்சுரன்சு’ எடுத்து வைச்சு இருக்கான் உங்க அம்மா சாவதற்கு முன்னாடியே,எப்போ பார்த்தாலும் உங்களை எப்படியாவது கரைசேர்த்து விடுவதை பற்றித்தான் பேசுவான்.அவன் ’ஆக்ஸிடண்ட்டில’ சாவலை வேலை, வேண்டும் என்றேதான் ’வண்டி’ முன்னாடி விழுந்து இருக்கான்,அப்போதான் கூட ’25’ லட்சம்’ கிடைக்கும் என்று ’பிளான்’ பண்ணிதான் விழுந்து இருக்கான்.பைத்தியக்காரன்.
’”செத்தும் கொடுக்கிறது, என்பது இதைத்தான் சொல்லி இருக்காங்க போல இருக்கு’” என்று சொன்னவர் ஓவென அழ ஆரம்பித்து விட்டார்.
’”காலம் முழுக்க கரித்து கொட்டிய மகனுக்கும்,மகளுக்கும் வாழ்க்கை முழுக்க சந்தோஷமா வாழ்றதுக்கான வழியை செய்துவிட்டு போய்விட்டான் பாவி, நல்லா இருங்க’” என்று புலம்பியபடியே அழது கொண்டே இருக்கிறார் சுந்தரம்.
வீட்டிற்கு வந்தவுடன், குற்றவுணர்ச்சி பீறிட,தாங்க முடியாமல் அந்த ’செக்கை’ கிழித்து போடுகிறாள் அகல்யா.
-----------------------------------------xxx---------------------------------------